இயேசுவின் மீது அன்புள்ளதா ? (Do you love Jesus?)

2 யோவா 6. நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/GGBk2AxL1TY

யோவான் அப்போஸ்தலன் தன்னுடைய நிருபங்களிலும் சுவிசேஷத்திலும் அன்பைப் குறித்து அதிகமாக எழுதியிருக்கிறார். காரணம், அவர் தான் மற்ற சீஷர்களை விட இயேசுவின் மீது அதிக அன்புகூர்ந்தார். இயேசுவின் மீது உங்களுக்கு அன்புள்ளதா இல்லையா என்பதை எப்படி கண்டுகொள்ளுவது?

இந்நாட்களில் வாழும் அநேக கிறிஸ்தவர்கள், தாங்கள் கிறிஸ்தவராகப் பிறந்ததினிமித்தமும், கிறிஸ்தவப் பெயர்களைத் தரித்ததினிமித்தமும், தாங்கள் பரம்பரை பரம்பரையாகச் சபைக்குச் செல்வதாலும் இயேசுவின் மீது அன்புகூருகிறார்கள் என்று நினைத்துக்கொள்கிறார்கள். இயேசுவை விசுவாசிப்பதற்கும், இயேசுவின் மீது அன்புகூருவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. சாத்தானும் கூட இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறான். ஆகையால், இயேசுவை தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பதால் அவர் மீது அன்பு இருக்கிறது என்று எண்ணிவிடக்கூடாது. இதைத்தான் யோவான் அப்போஸ்தலன் தெளிவுபடுத்த விரும்புகிறார். 1 யோவான் 5:3-லும் யோவான் அப்போஸ்தலன் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார்: ‘நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.’ என்பதாக.

மேற்குறிப்பிட்ட வசனங்களின்படி, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே நாம் அவர் மீது காட்டும் அன்பு என்பதை யோவான் மூலமாக ஆவியானவர் ஆணித்தரமாகக் கூறிவிட்டார். இதுதான் நாம் இயேசுவின் மீது அன்பு காட்ட தேவன் வகுத்த கோட்பாடு என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், இயேசுவின் உபதேசம் கடினம் என்றும், அவருடைய கற்பனைகள் பாரமானவை என்றும் சத்துரு ஒவ்வொருவருடைய சிந்தனைகளிலும் இடையூறு செய்கிறவனாகக் காணப்படுகிறான். அதோடு மட்டுமல்லாமல், அவன் தனக்கென்று பூமியில் பல மனிதர்களை ஏஜெண்டுகளாக வைத்திருக்கிறான். அவர்கள் மூலமாக வந்து, இயேசுவின் கற்பனைகள் கடினம், அதைப்பின்தொடர முடியாது, கைக்கொள்ள முடியாது என்று கூறவைக்கிறான். இந்த காலம் தொழில்துறைகள் முன்னேறியுள்ள காலம், டெக்னாலஜி உலகம் என்றெல்லாம் சொல்லி அவர்களின் மாய வலைக்குள் இழுக்க அவன் முயற்சிப்பான். ஆகையால் தான் மேற்கூறிய வசனத்தில் ஆவியானவர் மிகவும் தெளிவாகக் கூறிவிட்டார், அவருடைய கற்பனைகள் பாரமானவை அல்ல என்பதாக. அவருடைய நுகம் மென்மையானது என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

தேவனிடத்தில் அன்புகூருகிறேன் என்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால் அவன் பொய்யன்; தான் காணும் சகோதரனிடத்தில் அன்புகூர முடியாதவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? என்று வேதம் கேட்கிறது. ஆகையால், தேவனிடத்தில் அன்புகூருகிற ஒவ்வொருவரும் தங்களுடைய சகோதர சகோதரிகளைப் பலவிதமான சொத்துக்களுக்காகவும், பொருளாதாரத்திற்காகவும் பகைக்கிறவர்களாக இருக்கக்கூடாது. தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூர வேண்டும் என்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம் (1 யோவான் 4:21).

தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார் (1 யோவான் 4:16). இயேசுவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருக்குள் நிலைத்திருங்கள். இயேசுவை விசுவாசிப்பது வேறு, இயேசுவின் மீது அன்பு கூறுவது வேறு என்ற சத்தியத்தை நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். விசுவாசம் முக்கியம் தான், அதேவேளையில் அன்பு விசுவாசத்தை விட முக்கியமானது. இதைத்தான் பவுல் கூறுகிறார்: ‘இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது’ (1 கொரிந்தியர் 13:13) என்பதாக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *