மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை (மத். 16:18)
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YA4-pqMtq4U
பண்டைய காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே யுத்தம் நடக்கும் போது, எதிரியின் கோட்டைகளைப் பிடிப்பதில் அதிகக் கவனம் செலுத்துவார்கள், அதுவும் கோட்டைகளில் காணப்படுகிற வாசல்களின் மீதே முதலில் தாக்குதல் நடத்துவார்கள். ஏனெனில் ஒரு பட்டணத்தின் பாதுகாப்பு என்பது அதின் வாசல்களின் வலிமையைப் பொறுத்தே அமைந்திருக்கும். அதுபோல பாதாளத்தின் வாசல்கள் என்பது சத்துருவின் வல்லமையை வெளிப்படுத்துகிறது. பாதாளத்தின் வல்லமைகள் முழு பெலத்தையும் பயன்படுத்தி சபையோடு யுத்தம் செய்யும், ஆனால் சபைதான் ஜெயிக்கும் என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது.
கல்வாரிச் சிலுவையில் இயேசு தம்முடைய இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டெடுத்த மீட்பின் செய்தியை உலகிற்கு நற்செய்தியாக எடுத்துச் சொல்லுவது சபையும், சபை மக்களுமாய் காணப்படுகிறார்கள். சுவிஷேசம் பரவிச் செல்லும் போது, இப்பிரபஞ்சத்தின் அதிபதி, ஜனங்கள் மேல் செலுத்துகிற அதிகாரமும், ஆளுகையும் குறையத் துவங்கி விடும், சத்துருவின் ராஜ்யம் சுருங்கிவிடும். இயேசு, நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே, அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழிய பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம் என்று மத். 12:28,29ல் கூறினார். பலவானாய் காணப்படுகிற சத்துருவின் வல்லமையை முந்திக் கட்டும் போது மட்டுமே அவனுடைய ஆளுகையின்கீழ்க் காணப்படுகிற ஜனங்களை விடுவிக்கமுடியும்.
உலகம் முழுவதும் சபைகளுக்கு விரோதமான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. சபை தோன்றின நாளிலிருந்து நிலைமை அதுவாகவே காணப்படுகிறது. கீழ் தேசங்களில் மட்டுமல்ல, வளர்ந்த தேசங்களில் கூட சபைகளுக்கு விரோதமான செயல்களைப் பார்க்கமுடிகிறது. பல தேசங்களில் சபைகள் பூட்டப்படுகிறது, கொளுத்தப்படுகிறது. ஊழியர்களும், ஜனங்களும் கடினமான உபத்திரவங்களுக்குள்ளாக நடத்தப்படுகிறார்கள். ஒருகாலத்தில் கிறிஸ்துவின் நற்செய்தியைப் பல தேசங்களுக்குக் கொண்டு சென்ற வளர்ந்த கிறிஸ்தவத் தேசங்களில் கூட, இந்நாட்களில் பலவிதமான தடைகள் காணப்படுகிறது. புதிய ஆலயங்கள் கட்டமுடியவில்லை, அனுமதிகள் கிடைப்பதில்லை. இவை எல்லாம் பாதாளத்தின் வல்லமையின் யுத்தங்களாய் காணப்படுகிறது. பல தலைவர்கள் பிசாசின் ஆளுகையின் கீழ்க் காணப்படுவதினால் சபைகளுக்கு விரோதமான சட்டங்கள் இயற்றுகிறார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே, முழுப் பாதாளமும் சபைக்கு விரோதமாய் யுத்தம் செய்தாலும், சபைதான் ஜெயிக்கும், அது சபைக்காய் ஜீவன் கொடுத்த ஆண்டவருடைய வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. ஆகையால் சபை மக்கள் ஒன்றித்து நின்று சத்துருவோடும், அவன் சேனைகளோடும் யுத்தம் செய்வோம், அவனுடைய அக்கினி அஸ்திரங்களையும், தந்திரங்களையும் அழித்தொழித்து முன்னேறிச் செல்வோம். நீங்கள் ஜெயிப்பீர்கள், இயேசு உங்களை வெற்றி சிறக்கச் செய்வார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

