சாபம் அல்ல, சாட்சி (Not a curse, but a testimony)

அப்போஸ்தலர் 28:3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/VU9FrjaMAdQ

ஒரு கைதியாக கப்பல்யாத்திரை செய்து கொண்டிருந்த பவுலோடு அநேகர் காணப்பட்டார்கள். அவர்கள் போய்க்கொண்டிருந்த கப்பல் இயற்கை சீற்றத்தால் அநேக பாதிப்படைந்தது. இனி தப்பிப்பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லாமல் போகும்படி செய்தது. கடைசியில் கப்பல் முழுவதும் சேதமடைந்த நிலையில், அவர்களுடைய உடைமைகள் எல்லாவற்றையும் இழந்தவர்களாய், ஜீவன் மட்டும் தப்பும்படி கடலில் விழுந்து, நீந்தி இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

அவர்கள் தப்பிக் கரைசேர்ந்த அந்தத் தீவின் பேர் மெலித்தா. அந்நியராகிய அந்தத் தீவின் ஜனங்கள் அவர்களிடத்தில் அநேக அன்பு செலுத்தினார்கள். அங்கு பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, அவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். அப்பொழுது பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். ஆனால் பவுலோ அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் பவுலுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள்.

சர்ப்பம் கடித்த பவுலை சபிக்கப்பட்டவன் என்று நினைத்து, அவன் எப்போது சாவான் என்று பார்த்துக்கொண்டிருந்த ஜனங்கள் நடுவில் கர்த்தர் சாட்சியாய் நிற்கப்பண்ணினார். பவுலுக்குள் இருந்த அபிஷேகம் அவனை அந்த தீவில்  சாபமுடையவனாய் அல்ல , சாட்சியாய் நிற்க்கப்பண்ணினது. மற்றவர்களுக்கு அது சாபம் ஆனால் அபிஷேகிக்கப்பட்டவர்களுக்கோ அது சாட்சி.

கர்த்தருடைய அபிஷேகம் எல்லா சாபங்களையும் நீக்கும். அது வியாதி என்கிற சாபமாய் இருக்கலாம், தோல்வி என்கிற சாபமாய் இருக்கலாம், மரணம் என்கிற சாபமாய் இருக்கலாம், கடன் என்கிற சாபமாய் இருக்கலாம், பயம் என்கிற சாபமாய் இருக்கலாம், உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாய்க் காணப்படுகின்ற சாபமாய் இருக்கலாம், ஒருவேளை உங்கள் வாழ்க்கையில் காணப்படுகின்ற ஏதோ குறைவுகளின் நிமித்தம் இந்த சமுதாயம் உங்களை சாபமுடையவனாகப் பார்க்கலாம். இவைகள் எல்லாவற்றிலுமிருந்து உங்களை விடுதலையாக்க கர்த்தருடைய அபிஷேகம் போதுமானது,  அது மிகவும் தேவையானது.

ஆகையால், நீங்கள் தேவனிடத்தில் உண்மையாய்க் கேளுங்கள் என்னையும் இப்படிப்பட்ட அபிஷேகத்தால் நிரப்பும் என்று. அப்பொழுது அவர் உங்களை தம்முடைய அபிஷேகத்தினால் நிரப்பி, எல்லாவிதமான சாபங்களையும் நீக்கி, சமுதாயத்தில், தேசத்தின் நடுவில் தேவன் உங்களை மகிமையான சாட்சியாய் நிற்கப்பண்ணுவது நிச்சயம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *