கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும், மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன் (எசே. 36:37).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/o6IMw68-_Gk
வேல்ஸ் தேசத்தின் எழுப்புதலின் போது இவான் ராபர்ட்ஸ் என்ற தேவ மனிதன் திருச்சபையை வளைத்து உலகை இரட்சியும் என்று முழங்கினார். ஆயிரத்திதொள்ளாயிரத்து நான்காம் ஆண்டு அவர் ஏறெடுத்த விசுவாச ஜெபமாய் இது காணப்படுகிறது. சபையை வளையும் அல்லது வனையும் என்பது, கட்டிடத்தை அல்ல அங்கே காணப்படுகிற விசுவாசிகளைக் குறிக்கிறது. விசுவாசிகள் தங்களைத் தாழ்த்தி, பெருமைகள், மேன்மைகள் என்று கருதுகிற எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சுயத்தையும் சுயநலன்களையும் வெறுத்து, தேவ சமூகத்தில் மண்டியிடும் போது, ஆண்டவர் தேசத்தில் பெரிய எழுப்புதலைக் கட்டளையிடுவார். தேசத்தின் தலைவர்கள் மற்றும் குடிகளுடைய பாவங்களை மன்னித்து, விடுதலையைக் கட்டளையிடுவார். என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம் பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன் என்று 2 நாளா. 7:14ல் எழுதியிருக்கிற வாக்குத்தத்தம் அப்போது நிறைவேறும்.
எசேக்கியேல் தீர்க்கதரிசி, யூதாவின் குடிகள் பாபிலோனிய சிறையிருப்பில் காணப்பட்ட நாட்களில் தீர்க்கதரிசனம் உரைத்தவன். அவன் மூலம் யூதாவின் ஜனங்களைக் கர்த்தர் உற்சாகப்படுத்தி அனேக வாக்குத்தத்தங்களைக் கொடுப்பதை எசேக்கியேல் 36ம் அதிகாரத்தில் வாசிக்கமுடியும். இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன், பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும் என்றும், உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன் என்றும், உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளித்து உங்களைச் சுத்தமாக்குவேன் என்றும், கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறவர் பாழானதைப் பயிர்நிலமாக்குகிறவர் என்றும் அனேக வாக்குத்தத்தங்களைக் கொடுத்தார். கடைசியில், இவற்றை எல்லாம் இஸ்ரவேல் ஜனங்களுக்காக நான் அநுக்கிரகம் செய்யும் படிக்கு அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ண வேண்டும் என்ற கட்டளையைக் கொடுத்தார். அவர்கள் ஜெபிக்கும் போது, மந்தையில் ஆடுகள் பெருகுகிறது போல் யூதாவின் குடிகளைப் பெருகப்பண்ணுவேன் என்றும் வாக்குக் கொடுத்தார்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உலகத்தின் பலபகுதிகளில் தேவ ஜனங்களை நெருக்கி ஒடுக்குவது எப்படி என்பது தான் இந்நாட்களில் பலத் தலைவர்களுடைய, ஜனங்களுடைய யோசனையாய்க் காணப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் கர்த்தருடைய ஜனங்கள் செய்யவேண்டியது என்ன, யூதாவின் குடிகளைப் போல பாவஞ்செய்து, பாவம் என்னும் அடிமைத்தனத்திற்குள்ளாய் செல்லாதபடிக்கு, நம்மை வளைக்கும்படிக்கும், வனையும்படிக்கும் பரமக் குயவனுடைய கரங்களில் பூரணமாய் ஒப்புக்கொடுத்து விடுங்கள். அவரை நோக்கி விண்ணப்பங்களை ஏறெடுக்கும் போது, வானத்து நட்சத்திரங்களைப் போல நம்மை பெருகப்பண்ணுவார். சபைகள் வளர்ந்து பெருகும், ஒருபாதாளத்தின் வல்லமைகளும் நம்முடைய பெருக்கத்தைத் தடை செய்யமுடியாது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

