தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான் (நீதி. 22:29).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/2bpgbQrMWlI
ஒரு புதிய மாதத்தில் நம்மை அழைத்துக் கொண்டு வந்த தேவனுக்கு ஸ்தோத்திர பலிகளை ஏறெடுப்போம். உலகத்தில் அனேக நாடுகளில் மே ஒன்றாம் தியதியைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடுகிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தொழிலாளர் நலன்கள் பேணப்பட வேண்டும் என்பதற்காகவும், எட்டு மணி நேரம் மட்டும் வேலை நேரமாகக் காணப்பட வேண்டும் என்பதற்காகவும், அவர்களுடைய பிரயாசங்கள் மற்றவர்களுக்கு நன்மையைத் தருகிறது என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களைக் கனப்படுத்துவதற்காகவும் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேதமும், எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள் என்று கொலோ. 4:1ன் படியும், வேலைக்காரரே, அதிகப் பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள், நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள் என்று 1 பேதுரு 2:18ன் படியும் ஆலோசனை கூறுகிறது. வேலை செய்கிறவர்களுடைய கூலியை எஜமான்கள் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும், இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது, அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது என்று யாக். 5:4 எச்சரிக்கிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற வேலைகளை நீங்கள் திறம்படச் செய்ய வேண்டும். அது சாதாரண வேலைகளாயிருந்தாலும், அலுவலகப் பணிகளாயிருந்தாலும், தொழில் மற்றும் எந்த துறைகளாய் காணப்பட்டாலும் சரி, அதற்காக அவ்வப்போது உங்கள் திறன்களை மேம்படுத்தி, காலத்திற்கேற்ற தொழில்நுட்பங்களைக் கற்று உங்களைத் தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும். இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிக பலத்தைப் பிரயோகம் பண்ணவேண்டியதாகும், ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் என்று நீதி. 10:10 கூறுகிறது. ஆகையால் உங்கள் ஞானத்தையும், புத்திக் கூர்மையையும் அபிவிருத்தி செய்யுங்கள். ஞானத்தில் குறைவுள்ளவர்கள் கர்த்தரிடத்தில் கேட்டு ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆவியானவர் ஞானத்தையும், உணர்வையும், ஆலோசனையையும், பெலனையும், அறிவையும் தருகிறவர்.
நீங்கள் உங்கள் வேலைகளை ஜாக்கிரதையோடு செய்யும் போது கர்த்தர் உங்களை ராஜாக்களுக்கு முன்பாக நிறுத்துவார். யோசேப்பு, அவன் தகப்பனாகிய யாக்கோபு கொடுத்த பணியானாலும், போத்திபாரின் வீட்டு வேலையானாலும், சிறைச்சாலையில் செய்கிற வேலையானாலும், அவனிடம் ஒப்புவிக்கப்பட்ட எல்லா வேலைகளையையும் உத்தமமாகவும் செம்மையாகவும் செய்தான். ஆகையால், கர்த்தர் அவனை உயர்த்தி பார்வோனுக்கு அடுத்த இடத்தில் அவனை நிறுத்தினார். சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு என்ற கர்த்தருடைய வார்த்தையின்படி, அவர் உங்கள் கடின உழைப்புகளைக் கணக்கில் வைத்து, உங்களைக் கனம் பண்ணி, உயர்த்தி ஆசீர்வதிப்பார், நீங்கள் ராஜாக்களுக்கு முன்பாக நிற்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

