எலிசாவின் அழுகை (Elisha’s Cry)

2 இராஜா 8:11 பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/e2mhsq1Gx4Q

சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான். அங்கே எலிசா தீர்க்கதரிசி வந்திருக்கிறான் என்ற செய்தியை ராஜாவாகிய பெனாதாத் அறிந்துகொண்டான். தான் பிழைப்பானோ இல்லையோ என்று அறியும்படி ஆசகேலை எலிசாவிடம் அனுப்பி, கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான். எலிசா தீர்க்கதரிசி பெனாதாத் பிழைக்கமாட்டான் என்று சொன்னதோடு, அவன் தேம்பித் தேம்பி அழுகிறவனாகக் காணப்பட்டான். அவன் அழுவதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உண்டு. ஆசகேல் எப்படி ஒரு நாள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி அங்கிருக்கும் பிள்ளைகளை, வாலிபரை, தாய்மார்களைக் கொன்று குவிப்பான் என்பதை நினைத்தும், அடுத்ததாக இஸ்ரவேலின் மேல் அவன் வைத்த அன்பினிமித்தமாகவும் எலிசா அழுகிறவனாகக் காணப்பட்டான்.

எலியா தீர்க்கதரிசியைக் காட்டிலும் இரண்டு மடங்கு வல்லமையாக ஊழியம் செய்தவன், எலியா செய்த கடைசி அற்புதத்தை, எலிசா முதலாவதாகவே செய்தான். அப்படி வல்லமையாக இரண்டு மடங்கு அபிஷேகத்தோடு செயல்பட்ட ஒரு பெரிய தீர்க்கதரிசி அழுகிறவனாகக் காணப்பட்டான். இன்றைக்கு இருக்கிற ஊழியர்களில் திரளானோர் தங்கள் உடை, நடை, பாவனை மூலம் ஒரு நட்சத்திரமாகக் காண்பிக்கவே விரும்புகிறார்கள். ஆனால் பட்டணங்களுக்காக, தேசங்களுக்காக அழுகிறவர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள்.

வேதாகமத்தில் பெரிய பெரிய தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் அழுது ஊழியம் செய்தார்கள். எஸ்றா அழுதான். எஸ்றா இப்படி விண்ணப்பம் பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேல் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்(எஸ்றா 10:1). நெகேமியாவும் அழுதான். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபிக்கிறவனாய் காணப்பட்டான் (நெகே 1:4 ). புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலனாகிய பவுலும் அழுதான். வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்(அப் 20:19) என்று கூறுகிறான். இயேசுவும் கூட எருசலேமைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதார்.

இவர்களுடைய தீர்க்கதரிசன பார்வை, ஜனங்களை வஞ்சிக்கிறவர்களாக காணப்படாமல், அழுகிறவர்களாகக் காணப்பட்டார்கள். அநேக வருடங்களாக ஒரு ஆத்துமாவும் கிடைக்காமல், பின்னாட்களில் திரளான ஆத்துமாக்களை சம்பாதித்த ஒரு ஊழியக்காரரிடம் கேட்டார்கள், இவ்வளவு திரளான ஆத்துமாக்களை சம்பாதித்ததின் ரகசியம் என்னவென்று. அதற்கு அவர் சொன்னார் அழுது பாருங்கள் என்று. தேவனுடைய சமூகத்தில் கண்ணீர்விட்டு அழுது பாருங்கள். நீங்கள் கேட்கிறவைகளை அவர் கொடுப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org