கர்த்தருடைய வீட்டில் உண்மை உள்ளவர்களாயிருங்கள் (Be faithful in God’s house)

என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன் (எண். 12:7).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/pqoIls5EyS0

கர்த்தர் ஒரு மனிதனை உண்மையுள்ளவன் என்று காண்பதற்கு இணையான கனம் வேறொன்றுமில்லை. உண்மையுள்ள மனிதர்கள் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள், உண்மையாய் நடக்கிறவர்கள் மேல் அவருடைய பிரியம் காணப்படுகிறது. கர்த்தர் உண்மையை எதிர்பார்ப்பதின் நோக்கம் என்ன? அவர் உண்மையுள்ளவர். ஆகையால் தன்னுடைய சுபாவத்தைத் தன் பிள்ளைகளிடத்திலும் எதிர்பார்க்கிறார். மோசே கர்த்தருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாய் காணப்பட்டான். கர்த்தருடைய வீட்டில் பணிவிடைச் செய்வதிலும், கர்த்தருடைய ஜனங்களை விசாரிப்பதிலும் அவன் உண்மையுள்ளவனாய் காணப்பட்டான். ஆகையால் அவனுடைய நாற்பது வருட ஊழியத்தின் பாதையிலும் கர்த்தர் அவனோடிருந்து  அவனைக் கனப்படுத்தினார், அவன் மரணத்திலும் கூட கர்த்தரே அவனை அடக்கம்பண்ணினார். வேதத்தில் ஒரே ஒரு மனிதனைத்தான் கர்த்தர் அடக்கம்பண்ணினார், அந்த கனத்திற்குரிய பாத்திரமாய் மோசே காணப்பட்டான். கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான், அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார், இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான் என்று உபா. 34:5,6 கூறுகிறது.  

அப்போஸ்தலனாகிய பவுலும் கூட, என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை  உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன் என்று கூறினான். பவுல், தீமோத்தேயுவை குறித்து கூறும் போது, உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை  என்று  பிலிப்பிய சபை மக்களுக்கு எழுதினான். எசேக்கியா  ராஜா வியாதிப்பட்டு மரணத்திற்கு ஏதுவாயிருந்தவேளையில்,  அவர் கர்த்தரை நோக்கி, ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணினான். கர்த்தர் அவனுடைய விண்ணப்பத்தின் சத்தத்தைக் கேட்டார்.

கர்த்தருடைய பிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்கு என்று செய்கிற  காரியங்கள் எல்லாவற்றிலும்  உண்மையுள்ளவர்களாயிருங்கள். தேவனுடைய வீடாகிய சபையைக் குறித்து கரிசனை உடையவர்களாய் இருந்து, சபை கூடிவருதலை விட்டு விடாதிருங்கள். நீங்கள் கர்த்தருடைய வீட்டைக் குறித்த காரியங்களில் உண்மையுள்ளவர்களாய் காணப்படும் போது, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து கனம் பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae