எபே 3 : 7 , 8 தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/u7g9i9NVnxE
அப்போஸ்தலனாகிய பவுல் தனிச் சிறப்புமிக்க ஊழியக்காரன். பவுலின் வாழ்க்கையிலிருந்து, அவனுடைய குணாதிசயத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள் அநேகம் காணப்படுகின்றன. அனைவரும் அறிந்தவண்ணம், பவுல் ஒரு மிகப்பெரிய அப்போஸ்தலன் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அப்போஸ்தலனாகிய பேதுருவின் இரட்டை நிலைப்பாட்டை கண்டித்தவன். அப்படிப்பட்ட பெரிய அப்போஸ்தலன் சொல்லுகிற சில காரியங்களைப் பாருங்கள்.
மேற்குறிப்பிட்ட வசனத்தில், பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவன் என்பதாகச் சொல்லுகிறான். நம்முடைய சக விசுவாசிகளிடம், எல்லாருக்கும் முன்பாக மற்ற விசுவாசியைக் காட்டிலும் நான் பரிசுத்தத்தில் சிறியவன் என்று நம்மால் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். உண்மையில் சொல்லப்போனால், அவன் மற்ற பரிசுத்தவான்களைக் காட்டிலும் சிறியவன் அல்ல. 1 தீமோத்தேயு 1:15-ல் பவுல் கூறுகிறான், பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமானது; அவர்களில் பிரதான பாவி நான். பவுல் பிரதான பாவியா? இயேசுவை சபித்த சீஷர்களைக் காட்டிலுமா அவன் பாவி?. யூதாஸ் ஸ்காரியோத்தை காட்டிலுமா அவன் பாவி ? அப்படியென்றால், நம்மை நாம் எந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளுவது என்று யோசித்துப் பாருங்கள். பிலிப்பியர் 3:7-ல் பவுல் கூறுகிறான், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன் என்பதாக. பவுல் தன்னையே வெறுமையாக்கிக்கொண்டான். நமக்கு லாபம் படிப்பு, செல்வம் என்று எதுவாக இருந்தாலும், கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணி, நம்மை வெறுமையாக்குகிறவர்களாகக் காணப்பட வேண்டும். 1 கொரிந்தியர் 14:18-ல் பவுல் கூறுகிறான், உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் என்பதாக. ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து சரியான வெளிப்பாட்டோடு பயிற்றுவிப்பதில் இயேசுவுக்கு அடுத்து பவுலை யாரும் மிஞ்ச முடியாது. 1 கொரிந்தியர் 15:9-ல் கூறுகிறான், நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல என்பதாக. ஊழியத்தில் அவனுடைய தகுதியைப் புகழ்ந்து பேசாமல், தன்னை மற்றவர்களைக் காட்டிலும் சிறியவனாகக் காண்பிக்கிற பண்பை உடையவனாய் பவுல் காணப்பட்டான்.
இப்படி பவுலின் தனிச்சிறப்புகளெல்லாம் நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். நாம் நம்மையே புகழாமல், பவுலைப் போல அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன் என்பதைப் போல, நாம் தேவனுடைய கிருபையைச் சார்ந்திருக்கிறவர்களாக, அவர் கிருபையை உயர்த்திப் பிடிக்கிறவர்களாகக் காணப்படுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

