சிநேகிதரின் வாழ்த்துதல் (A Friend’s Greetings)

3 யோவா 14. சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/RUPnlvKNKjo

இயேசு பரிசுத்தவான்களுக்கு சிநேகிதராக இருக்கவில்லை, ஆனால் பாவிகளுக்கு சிநேகிதராக இருந்தார். ஆனால் இந்நாட்களில் சபையில் பரிசுத்தவான்களோடு கூட சிநேகத்துவம் இல்லாமல் காணப்படுகிறது. இயேசுவுக்கும் சீஷர்களுக்கும் இருந்த உறவு எப்படிப்பட்டதென்று இயேசுவே கூறியிருக்கிறார்: ‘இனி நான் உங்களை ஊழியக்காரர் என்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான்; நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்’ என்று யோவான் 15:15-ல் இயேசு கூறினார். அதுபோல இன்னும் ஒரு இடத்தில், ‘என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்’ (லுக் 12:4) என்று இயேசு சீஷர்களைச் சிநேகிதர் என்றே அழைத்தார். இயேசு தாமே நம்மைச் சிநேகிதன் என்று அழைக்கும்போது, நாம் பிறரிடம் சிநேகத்துவம் இல்லாமல் எப்படி காணப்பட முடியும்? யூதாஸைக் கூட இயேசு சிநேகிதன் என்றே அழைத்தார் என்பதை மத் 26:50-ல் வாசிக்க முடியும்.

அநேக வேளைகளில் சிநேகிதம் என்பது உலகத்துவமானது என்ற தவறான எண்ணத்தை நாம் கொண்டுள்ளோம். ஆனால் சிநேகத்துவம் என்பது தெய்வீகமானது என்பதை வேதம் அநேக இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. யாக்கோபு 2:23-ல் ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான். யாத்திராகமம் 33:11-ல் மோசே தேவனுடைய சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான். யோவான் 3:29-ல் யோவான் ஸ்நானகன் இயேசுவின் சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான். யோவான் 11:11-ல் லாசரு இயேசுவின் சிநேகிதன் என்று அழைக்கப்பட்டான். இப்படி வேதத்தில் பரிசுத்தவான்களும் சீஷர்களும் தேவனுடைய சிநேகிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். உங்களுக்கும் இயேசு சிநேகிதனாக இருக்கிறார்.

அதுபோல சபையிலிருக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளிடமும் சிநேகத்துவம் காணப்பட வேண்டும். சிநேகத்துடன் அன்பைக் கூட்டி வழங்க வேண்டும் என்று பேதுருவும் கூறுகிறார். அப்படிப்பட்ட சகோதர சிநேகம் சபையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கட்டும்; சகோதாரர்களைச் சிநேகத்துடன் வாழ்த்துகிறவர்களாகக் காணப்படுங்கள். உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன் என்று சங்கீதக்காரன் சங் 119:63-ல் கூறுகிறார். ஆகையால் சபையில் இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற ஒவ்வொருவருவரும் தோழர்களாகக் காணப்பட வேண்டும் என்பதைத் தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org