நீதி 29 : 18 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hkOiE7n8NxA
நீதிமொழிகள் புஸ்தகத்தின் கடைசி இரண்டு அதிகாரங்கள் சாலொமோனால் எழுதப்பட்டவை அல்ல. அவன் எழுதிய கடைசி அதிகாரத்தில் மிக முக்கியமான சத்தியத்தைக் கூறுகிறான். இந்த வசனத்தின் முதல் பகுதி பல்வேறு விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: “வெளிப்பாடு இல்லாத இடத்தில்”, “தீர்க்கதரிசனம் இல்லாத இடத்தில்”, “தீர்க்கதரிசி இல்லாத இடத்தில்”, “தீர்க்கதரிசனப் பார்வை கொண்டவர் (seer) இல்லாத இடத்தில்” எனப் பலவாறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதானமாக “தரிசனம் இல்லாத இடம்” என்று பல மொழிபெயர்ப்புகள் கூறுகின்றன. இத்தகைய தரிசனமோ அல்லது வெளிப்பாடோ இல்லாத சூழலில், ஜனங்கள் கட்டுப்பாடு இன்றிச் செயல்படுகிறார்கள்; ஆடுகளைப் போலச் சிதறிப் போகிறார்கள்.
1 சாமுவேல் 3:1-ல், அக்காலத்தில் கர்த்தருடைய வார்த்தை அரிதாக இருந்தது என்றும், தரிசனங்கள் அடிக்கடி உண்டாகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில்தான் தேவன் சாமுவேலை எழுப்பினார். இன்றும் திருச்சபைக்கு இத்தகைய தரிசனம் மிகவும் அவசியமாக உள்ளது. உறுதியான தீர்க்கதரிசன வார்த்தை இல்லாததால், மக்கள் நியாயாதிபதிகள் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல, தங்களுக்குத் தோன்றியபடியே நடந்துகொள்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் கடைசி வசனம் இவ்வாறு கூறுகிறது: “அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்” (நியா 21:25) என்பதாக. இன்றைய கிறிஸ்தவ உலகம் மற்றும் பல சபைகளின் நிலை இவ்வாறுதான் காணப்படுகிறது.
அதே போல குடும்ப வாழ்விலும், குடும்பத்தின் தலைவரான கணவன், தன் குடும்பத்திற்காகக் தேவன் வைத்திருக்கும் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அவர் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பைத் தன் மனைவியிடம் விட்டுவிடுவார். ஏதேன் தோட்டத்தில் ஏவாள் குடும்பத்தை வழிநடத்தத் தொடங்கியபோது என்ன நடந்ததோ, அதுவே அப்படிப்பட்ட குடும்பத்திலும் சம்பவிக்கும். ஒரு வீட்டிற்கு கணவன் தான் ஆசாரியன்; அவன் தான் முதலாவதாக தேவத் திட்டத்தை அறிந்து அதின்படி குடும்பத்தை நடத்த அறிந்திருக்க வேண்டும். ஒரு ஆணுக்குத் தெளிவான தரிசனப் பார்வை இல்லையென்றால், அவனது பிள்ளைகள் கட்டுப்பாடின்றி வளர்ந்து, கலகம் செய்யத் தொடங்குவார்கள். இன்று பல கிறிஸ்தவக் குடும்பங்களில் இத்தகைய சூழலையே காண முடிகிறது.
சபையில் ஆண்டவர் சபையை நடத்தும் போதகருக்கு கொடுத்திருக்கும் தரிசனத்தைச் செயலாற்றவும், செய்து முடிக்கவும் சபையிலுள்ள ஒவ்வொரு விசுவாசிகளும் அதே தரிசனப்பார்வையோடு செயல்பட வேண்டும். குடும்பத்திலும் தேவன் கணவனுக்குக் கொடுத்திருக்கும் தரிசனப் பார்வைக்குத் தோள்கொடுக்கும் மனைவிகளாகவும் பிள்ளைகளாகவும் குடும்பம் காணப்பட வேண்டும். அப்படிப்பட்ட சபையும் குடும்பமும் ஒருநாளும் சீர்கெட்டுப் போவதில்லை.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

