தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார் (அப். 2:47).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/OA0yrgTwHmM
பெந்தெகொஸ்தே பண்டிகை நாளன்று மேல் வீட்டறையில் சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்த வேளையில் ஆவியானவர் வல்லமையாய் அவர்கள் மேல் இறங்கினார். அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின் கீழிருக்கிற எல்லாத் தேசங்களிலிருந்து வந்த பக்தியுள்ள யூதர்கள் அங்கே காணப்பட்டு அதைப்பார்த்து பிரமிப்படைந்தார்கள். அவர்கள் நடுவில் பேதுரு எழும்பிநின்று சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடு எழும்பின இயேசுவை மையப்படுத்திப் பிரசங்கித்த வேளையில் சுமார் மூவாயிரம் பேர் மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெற்று சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள், அன்றைய தினம் புதிய ஏற்பாட்டுச் சபை தோன்றினது. அவர்கள் ஒருமனதோடு அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினமும் சபையில் சேர்த்துக்கொண்டு வந்தார். அன்றிலிருந்து சபை என்பது கிறிஸ்துவின் சரீரமாகவும், விசுவாசிகள் எல்லாரும் அந்தச் சரீரத்தின அவயவங்களாகவும் இணைந்த ஒரு சமூகமாக மாறினது.
கர்த்தருடைய பிள்ளைகளே, சபை கூடிவருதல் என்பது கர்த்தர் உங்களைக் குறித்துக் கொண்ட சித்தமாயிருக்கிறது. சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லவேண்டும் என்று எபி.10:25 கூறுகிறது. சபை என்பது நாம் ஒருவரிலொருவர் அன்புகூருகிற இடமாகும். ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி நற்கிரியைகளைச் செய்யத் தூண்டுகிற இடமாய் காணப்படுகிறது. ஒருவருக்கொருவர் சேவைச் செய்கிற இடமாகவும், கனம் பண்ணுகிற இடமாகவும் காணப்படுகிறது. சமூக சேவைகளைச் செய்து ஏழைகளுடைய வாழ்வாதாரத்தையும், கல்வியையும் உயர்த்த நமக்கு போதிக்கிற இடமும் சபையாகும். கிறிஸ்துவின் நற்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச்செல்லுவதே சபையின் பிரதானக் கடமையாகும். சபைகள் மூலமாகத்தான் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கமுடியும். சபை பிசாசின் கிரியைகளைத் தடைசெய்து, இருளின் ஆதிக்கத்தை அழிக்கிறது. பூமியில் மணவாட்டி சபைதான் தேவனுடைய ராஜ்யமாகக் காணப்படுகிறது.
கடைசிநாட்களில் காணப்படுகிற சபைகள் லவோதிக்கேயா சபையைப் போல அனலுமில்லாமல், குளிருமில்லாமல் வெதுவெதுப்பாய் காணப்படுகிறது. பரிசுத்தத்திற்காகவும், பயபக்திக்காகவும், விசுவாசத்திற்காகவும் போராட வேண்டிய சபைகள் தங்களை நிலைப்படுத்திக் கொள்வதற்கே போராடவேண்டியுள்ளது. சமுதாயத்தை ஒழுக்கத்தில் கட்டியெழுப்ப வேண்டிய சபையும், சபைமக்களும் சமுதாய சீர்கேடுகளுக்குக் காரணமாய் காணப்படுகிறார்கள். கிறிஸ்தவக் குடும்பத்தையும் சபையையும் கர்த்தருடைய கண்கள் ஒன்றுபோல பார்க்கிறது, ஆனால் அந்நிய நுகத்தில் பிணைக்கப்படுவதையும், அந்நிய வித்துக்களோடு கலப்பதையும் சபை கடிந்துகொள்ளவில்லை, ஆகையால் உலகத்தோடு ஒன்றித்துப் போகிறவர்களாகச் சபைமக்கள் மாறிவிட்டார்கள். விவாகரத்துகளும், பிரிவினைகளும் உலகத்தை விடச் சபைகளுக்குள் பெருகிவிட்டது. ஆகையால் கர்த்தர் சபை ஐக்கியத்தை உருவாக்கிய நோக்கத்தைப் புரிந்து கொண்டு, சமூகப் பொறுப்புகளையும் உணர்ந்து வாழ உங்களை அர்ப்பணியுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

