கிறிஸ்து சபைக்குத் தலை (Christ is the Head of the Church)

அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர், எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர் (கொலோ. 1:18).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/i6PQ_UJwfHY

சபைக்கு இயேசு தலையாய் காணப்படுகிறார். மனிதனுடைய  சரீரத்திற்குத் தலை கட்டளை கொடுத்து வழிநடத்துவது போல கிறிஸ்து சபையை வழிநடத்துகிறார். தலைக்கும், சரீரத்திற்கும் இடையே இருக்கும் பிணைப்பைப் போல, கிறிஸ்துவுக்கும் சபைக்கும் இடையே காணப்படுகிற உறவு காணப்படுகிறது. கிறிஸ்துவையும் சபையையும் பிரிக்கமுடியாது,  அப்படிப் பிரிக்கப்படும் என்றால் உயிரற்ற ஒரு சரீரத்திற்கு ஒப்பாகச் சபை மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு சபையைக் குறித்து வேதம் கூறும்போது, சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது  என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது, உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய் என்று வெளி. 3:1ல் எழுதப்பட்டிருக்கிறது. இந்நாட்களிலும் இப்படிப்பட்ட சபைகள் காணப்படுகிறது. கிறிஸ்துவை வெளியே நிறுத்தி, வேதத்திற்குப்  புறம்பான காரியங்களைச் செய்து, உலக வழக்கத்தின்படி காரியங்களை நடப்பிக்கும் போது அது ஆண்டவருடைய பார்வையில் உயிரற்ற சபையாய் காணப்படும். ஆகையால் சபை ஒவ்வொருகாரியங்களையும் கிறிஸ்துவுடன்  சரிபார்த்துச் செயல்படவேண்டும்.

இயேசுவே சபையை ஆளுகிறவர், ஆகையால் சபையை நடத்துகிறவர்களும், சபைத் தலைவர்களும் அவர்களுக்கு மேலான அதிகாரமுடையவராய் இயேசு காணப்படுகிறார் என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும். சபை மக்களும் முதலாவது சபையின் பிரதானத் தலைவராய் காணப்படுகிற கிறிஸ்துவுக்கு உங்களைக் கீழ்ப்படுத்தி ஒப்புக் கொடுக்க வேண்டும், அவருடைய மாதிரியை முதலாவது பின்பற்ற வேண்டும். பின்பு உங்களை நடத்துகிறவர்கள் உங்கள் ஆத்துமாக்களுக்கு உத்தரவாதம்  பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறபடியால் அவர்கள் மாதிரியைப் பின்பற்றி, அவர்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கவேண்டும். இந்நாட்களில் சபைத் தலைவர்களையும், போதகர்களையும் கிறிஸ்துவுக்கு மேலாகப் பார்க்கிற விசுவாசிகள் உண்டு.   அனேக போதகர்கள் தங்கள் விசுவாசிகளை மூளைச் சலவைச் செய்து மேய்ப்பனுக்குக்  கீழ்ப்படியவேண்டும் என்று மட்டுமே போதனைச் செய்து,   அவர்களைத் தங்கள் அடியாட்களாய் மாற்றி வைத்திருக்கிறவர்களும் உண்டு. 

கிறிஸ்து தன்னுடைய இரத்தத்தைச் சிந்திச் சம்பாதித்தது சபை,   கிறிஸ்து சபையின் மேல் கொண்ட அன்பு மேலானது, கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,   கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார் என்று எபேசி. 5:26,27 கூறுகிறது. கிறிஸ்து சபையில் அன்பு கூர்ந்ததின் நிமித்தம் அதற்காகத் தன்னை முழுமையுமாய் ஒப்புக்கொடுத்தார். ஆகையால் கிறிஸ்துவே சபைக்குத் தலையாய் காணப்படுகிற தகுதியைப் பெறுகிறார். கர்த்தருடைய பிள்ளைகளே, தலையாகிய இயேசுவோடு இணைந்திருங்கள், கீழ்ப்படிந்திருங்கள், அப்போது கிறிஸ்துவின் சிந்தை உங்களை நிரப்பும், நீங்கள் ஆசீர்வாதமாயிருப்பீர்கள்

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *