நாவிற்கு கடிவாளம் போடுங்கள் (Put a bridle on your Tongue)

யாக் 3 : 2 நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/4qJn-YlWrgM

கடிவாளம் என்பது குதிரை போன்ற விலங்குகளைக் கட்டுப்படுத்தவும், திசை திருப்பவும் அதன் வாயில் மாட்டப்படும் இரும்புக் கருவி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கயிறுகள் அல்லது வார்களைக் குறிக்கும். இதை ஒரு குதிரைக்கு மாட்டியிருந்தால், அதில் ஏறி இருக்கும் நபர் தன்னுடைய இஷ்டத்திற்கு இந்த பெரிய குதிரையைத் திருப்ப முடியும். ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷன் என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் ஒருவன் சொல்தவறினால் அவன் பூரணபுருஷன் இல்லை என்பது நமக்கு தெளிவாகிறது. குதிரையின் கடிவாளத்தை அதை இயக்கும் நபர் கட்டுப்படுத்துவதுபோல, உங்கள் நாவையும் பரிசுத்த ஆவியானவர் கட்டுப்படுத்தும்படி ஜெபியுங்கள். வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவது ஞானமல்ல. இயேசு பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு எதை எப்பொழுது எங்கே பேசவேண்டும் என்று மிகவும் நன்கு அறிந்திருந்தார். அவர் சாதாரண தச்சனாக இருந்தாலும் அவர் வாயிலிருந்து கிருபையுள்ள வார்த்தைகள் புறப்பட்டு வந்தது. அவர் ஒன்றும் மெத்த படிப்பு படித்தவரும் அல்ல, மிகப்பெரிய MNC என்று அழைக்கப்படும் நிறுவனங்களில் பணிபுரிந்தவரும் அல்ல, மாவட்டத்தை நிர்வாகிக்கும் கலெக்டர் போன்ற பதவியிலும் இல்லை. அவர் சாதாரண தச்சனாக இருந்தபோதும் அவர் நாவை பரிசுத்த ஆவியானவர் கட்டுப்படுத்தியதால் கிருபையுள்ள வார்த்தைகளை அவர் பேசினார். எந்த ஒரு இடத்திலும் இயேசு தகாத வார்த்தையைப் பேசினார் என்று வேதாகமத்தில் எங்கும் பார்க்கமுடியாது.

பேதுரு அப்போஸ்தலன் இந்த நாவைக் குறித்து இப்படியாக விளக்குகிறான். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக் காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன் (1 பேது 3 : 10 , 11 ). யார்தான் ஜீவனை விரும்பாதவர்களாக இந்த உலகத்தில் இருக்க முடியும்? யார்தான் நல்ல நாட்களைக் காணவேண்டும் என்று விரும்பாமல் இருப்பார்கள்? அப்படி இருக்க வேண்டுமென்றால், நம்முடைய நாவிற்கு கடிவாளம் போட வேண்டும்.

வயலில் வேலை பார்க்கும் விவசாயி ஏர் மாடுகளுக்கு வாயில் கடிவாளத்தைப் போட்டிருப்பார். காரணம் அவை தேவையில்லாமல், நிலத்தில் வளரும் பயிர்களைத் தின்றுவிடக்கூடாது என்பதற்காகவும், தன்னுடைய இஷ்டப்படி மாட்டை நடத்தவும் அப்படிச் செய்வார். அதுபோலத்தான் நம்முடைய நாவும் கடிவாளத்தினால் இணைக்கப்பட்டு ஆவியானவரின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும்.

நாவைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாளும் நாம் ஏறெடுக்க வேண்டிய ஜெபம் காணப்படுகிறது. என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக (சங் 19 : 14 ) என்று சங்கீதக்காரன் ஜெபிப்பதைப்போல ஜெபியுங்கள். மாத்திரமல்ல, கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும் (சங் 141 : 3 ) என்றும் ஜெபியுங்கள். காவலாளர்கள் பட்டணத்தைக் காப்பதுபோல, உங்கள் நாவிற்குக் காவல் வையுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளிலிருந்து தான் ஜீவனும் நல்ல நாட்களும் காணப்படுகின்றன.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *