நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்துத் தேசத்தில் பெருகிற்று (யோபு 1:10).
பிசாசு, பொய்யனும், பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறான். ஆனால் மேற்குறிப்பிட்ட வசனத்தில் மாத்திரம் அவன் ஒரு உண்மையை பேசுகிறான். அது என்ன என்று பார்க்கும்போது, கர்த்தர் அவருடைய பிள்ளைகளையும், அவர்களுடைய வீட்டாரனைவரையும், அவர்களுக்கு உண்டான எல்லா ஆசீர்வாதங்களையும் சுற்றிலும் வேலியடைத்துப் பாதுகாக்கிறவர் என்பதாய் காணப்படுகிறது. உலகத்தில் காணப்படுகிற எந்த பாதுகாப்பு வேலிகளையும் தாண்டிவிடலாம், ஆனால் கர்த்தருடைய வேலியை, ஒருவராலும் தாண்டமுடியாது. அதைத் தாண்டி ஒரு தீங்கும் உங்களைத் தொடுவதுமில்லை. கர்த்தருடைய வேலி யோபுவோடு காணப்பட்டதின் காரணம் அவன் உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான் என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகள் உத்தமமாய் கர்த்தரைப் பின்பற்றும் போதும், சன்மார்க்க ஜீவியம் செய்யும் போதும், கர்த்தருக்குப் பயந்து ஒவ்வொரு காரியங்களையும் செய்து, பொல்லாப்பாய் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகும் போது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் சுற்றிலும், உங்கள் குடும்பத்தைச் சுற்றிலும், உங்கள் ஆஸ்தி ஐசுவரியங்களைச் சுற்றிலும் வேலியடைத்துப் பாதுகாப்பார். என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய் (உன். 4:12) என்ற கர்த்தருடைய வார்த்தையின்படி கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தையும் வேலியடைத்துப் பாதுகாக்கிற நல்ல தகப்பனை நாம் சேவிக்கிறோம். ஆகையால் மனங்கலங்காதிருங்கள்.
யோபுவை சோதிப்பதற்குக் கூட தேவனுடைய அனுமதி சாத்தானுக்குப் தேவைப்பட்டது. அதுவும் கர்த்தரால் அவன் இரட்டிப்பாய் ஆசீர்வதிக்கப்படுவான் என்பதைச் சத்துரு முன்பே அறிந்திருப்பானேயென்றால், அவனைச் சோதிப்பதற்குக் கூட அனுமதி கேட்டிருக்கமாட்டான். அதுபோல, சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து (லூக்கா 22:31-32) என்று பேதுருவைப் பார்த்து ஆண்டவர் கூறினார். சோதிக்கும்படிக்குச் சத்துரு உத்தரவு கேட்டால் கூட, சோதனைகளில் நமக்கு உதவி செய்கிற தேவன் அவர், அதுபோல, சோதனைகளுக்கு தப்பிப் போகிற மார்க்கத்தை உண்டுபண்ணுகிற கர்த்தர் அவர். நாம் சோதனைகளுக்குள் பிரவேசிக்காதபடிக்கு எல்லா தீமைகளுக்கும் நம்மை விலக்கிக் காக்கிற தேவன் நம்மோடு இருக்கிறார் என்பது நம்முடைய பாக்கியமாய் காணப்படுகிறது.
எருசலேமைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருப்பேன் என்று வாக்களித்தவர், உங்களைச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து வேலியடைத்து உங்களைப் பாதுகாப்பார். உன்னதமான தேவன் தம்முடைய செட்டைகளின் மறைவில் வைத்து உங்களைப் பாதுகாத்து நடத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org

