யாக்கோபின் இக்கட்டுக்காலம். (Jacob’s Trouble)

ஐயோ! அந்த நாள் பெரியது, அதைப்போலொத்த நாளில்லை, அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம், ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான் (எரேமியா 30:7).

எருசலேம் பட்டணம்,பாபிலோனிய ராஜாவாகிய நேபுகாத்நேச்சருடைய சேனைகளினால் முற்றிகைப் போடப்பட்டிருந்தது. இந்த குறிப்பிட்ட கடைசி முற்றிகை சுமார் பதினெட்டு மாதங்கள் வரைக்கும் நீடித்தது, இதின் முடிவில் எருசலேம் பட்டணமும் தேவாலயமும் முழுவதுமாக இடிக்கப்படப் போகிறது. இந்த முற்றிகையின் நாட்கள் யூதேயாவின் குடிகளுக்கு இக்கட்டுக் காலமாய் காணப்பட்டது.  தத்தளிப்பின் சத்தம் எங்கும் கேட்டது, திகிலும் பயமுண்டு, சமாதானமில்லை. ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ? பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்துக்கொண்டு, முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும்(Birth Pain) எரேமியா கண்டான். முற்றிகையானது பல நெருக்கங்களை அவர்களுக்குக் கொண்டுவந்தது. அதுமாத்திரமல்ல, யூதாவின் ஜனங்கள் எழுபது வருடங்கள் அடிமைகளாய் காணப்படப் போகிறார்கள். இவர்கள் எதிர்காலம் என்ன என்பதையும், எருசலேம் திரும்ப எடுத்துக் கட்டப்படுமா என்ற பல கேள்விகளும் எரேமியாவின் மனதில் காணப்பட்ட வேளையில் கர்த்தர் பேசி சொன்ன வார்த்தை, யாக்கோபின் இக்கட்டுக் காலம் மாறும் என்றும், அவர்கள் அதற்கு நீங்கலாக்கி இரட்சிக்கப்படுவார்கள் என்றும் கர்த்தர் வாக்குக் கொடுத்தார்.  நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன், அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அதுபோல யூதாவின் நுகத்தை அவர்கள் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, அவர்கள்  கட்டுகளை அறுப்பேன் என்றும் அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை என்றும் சேனைகளின் கர்த்தர் வாக்குக் கொடுத்தார். அப்படியே அந்த வார்த்தைகள் நிறைவேறினது.

யாக்கோபின் இக்கட்டுக் காலம் என்பதற்கு இன்னொரு அர்த்தமும் காணப்படுகிறது. கர்த்தருடைய இரகசிய வருகையில் கைவிடப்பட்ட ஜனங்களும், யூதர்களும் அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் கீழ் ஏழு வருடங்கள் காணப்படுவார்கள். அந்த நாட்களை வேதம் உபத்திரவ காலம் என்றும் மகா உபத்திரவ காலம் என்று அழைக்கிறது.  அந்த நாட்களைக் குறித்து இயேசு தன்னுடைய ஒலிவமலை வெளிப்பாட்டில் கூறும்போது, உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும் என்றும்,  யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் என்றும்,வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன்,வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன் என்றும்,அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ என்றும் கூறுவதை (மத். 24:16-21) மூலம் அறியமுடிகிறது. ஆனால், பிலதெல்பியா சபைக்குக் கர்த்தர் செய்தியை அனுப்பும் போது,என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால்,பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன் (வெளி.3:10) என்று வாக்குக் கொடுக்கிறார். மணவாட்டி சபையை, கர்த்தரை ஆவியோடும்  உண்மையோடும் சேவிப்பவர்களைக் கர்த்தர் தன்னுடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்வார், யாக்கோபின் இக்கட்டு காலம் என்று அழைக்கப் படுகிற உபத்திரவக் காலத்தில், அப்படிப்பட்டவர்கள் பூமியில் காணப்படுவதில்லை. இந்த கிருபையின் நாட்களில் நித்தியத்திற்குரியதைத் தேடுகிறவர்களாய் நாம் காணப்படவேண்டும். 

கர்த்தருடைய பிள்ளைகளே! இந்நாட்களை நாம் பார்க்கும் போது கூட, மிகவும் தத்தளிப்பின் நாட்களாய், கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல வேதனையின் நாட்களாய், கலக்கத்தின் நாட்களாய், பாடுகளின் நாட்களாய் யாக்கோபின் இக்கட்டுக் காலம்  போலக் காணப்படுகிறது. கோவிட்19, கறுப்பு பூஞ்சை வியாதி, குரங்கு அம்மை, யுத்தங்கள், பஞ்சங்கள் என்றும் ஒன்றன்பின் ஒன்றாய் பிரச்சினைகள் எங்கும் காணப்படுகிறது. துற்செய்திகளை ஒவ்வொரு நாளும் கேட்கிறோம். ஆனால் கர்த்தர் உங்களை இப்படிப்பட்ட இக்கட்டு நாட்களுக்கு தப்புவிப்பார். அவர் உங்களைக் கண்ணின் மணிபோல காத்தருளுவார். ஆகையால் சோர்ந்து போகாதிருங்கள். உற்சாகத்தோடு கர்த்தரைச் சேவிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *