கலகம் பண்ணும் கர்த்தருடைய பிள்ளைகள்(Rebellious Children).

வானங்களே,  கேளுங்கள்,  பூமியே,  செவிகொடு, கர்த்தர் பேசுகிறார், நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன், அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினார்கள் (ஏசாயா 1:2).

ஒவ்வொரு வருஷத்திலும் ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக் கிழமை தந்தையர் தினமாக சில நாடுகளில் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு தகப்பனாரும் தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைச் செம்மையாய் உருவாக்குவதற்கு எடுத்த பிரயாசங்களையும் தியாகங்களையும் நினைவு கூர்ந்து,  அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்கும்,  மகிழ்விக்கிறதற்கும் உருவாக்கப்பட்ட நாளாய் காணப்படுகிறது. பிள்ளைகள் தங்கள் தகப்பன் செய்ய நன்மைகளை நினைத்து,  அவர்கள் மேல் அன்பையும்,  பாசத்தையும் பொழியும் போது,  அது அவர்களுடைய இருதயத்தை மகிழ்விக்கும். அப்படிப்பட்ட நல்ல பிள்ளைகளாய் நீங்கள் காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். ஆனால் சில பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு விரோதமாக கலகம் பண்ணி,  அவரை வீட்டில் வைத்துப் பராமரிப்பதற்குரிய வசதிகள் இருந்தும் முதியவர்கள் வசிக்கும் இல்லங்களில் விட்டு,  கைவிடப்பட்ட நிலையில் தவிக்கவிடுவதுமுண்டு.  அதுபோல உலகத்தின் தகப்பன்மார்களில் சிலரும் தங்கள் பிள்ளைகளைத் திக்கற்றவர்களாய் விட்டு,  பராமரிக்காமல்,  மனம் போன போக்கில் குடிகாரர்களாகவும்,  ஊதாரித்தனத்திலும் ஜீவித்து,  தன்னுடைய பிள்ளைகளை அனாதைகளாய் விட்டுச்செல்லுகிறவர்களும் உண்டு.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் ஒரு நல்ல பரம தகப்பனைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. தன் பிள்ளைகளை வளர்த்தி ஆதரித்த தகப்பன் அவர். பொல்லாத உலகத்தின் தகப்பன்மார்களைப் பார்க்கிலும் அதிக நன்மையானவற்றைச் செய்கிற நல்ல தகப்பன் அவர். நன்மையான எந்த ஈவும்,  பூரணமான எந்த வரமும் அவரிடத்திலிருந்து வருகிறது. அவர் தீமை செய்ய அறியாதவர். அவருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையில் எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாக மாத்திரம் செய்கிறவர். உலகத்தின் தகப்பன்மார்கள் கூட தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் தவறுகளைச் செய்யலாம்,  ஆனால் பரம தகப்பன் ஒருதவறுகளையும் ஒருபோதும் செய்வதில்லை. அவர்தான் நாம் ஆராதிக்கிற தேவன்.  இஸ்ரவேல்  ஜனங்கள் எகிப்தில் அடிமைகளாய் காணப்பட்ட வேளையில்,  அவர்களை விடுவித்து,  ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல,  நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும்,  நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும்,  உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே என்று உபா. 1:31ல் வாசிக்கிறோம். தோள்களின் மேல் வைத்து நம்மைச் சுமக்கும் நல்ல தகப்பன் அவர். அவரை அப்பா பிதாவே (Abba Father)  என்று அழைக்கிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்ற அவருடைய பிள்ளைகள் நாம் பாக்கியவான்கள்.

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து,  அவர்கள் நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும்,  அவர்கள் வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும்,  அவர்கள் நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் அவர்களுக்குக் கொடுத்திருந்தும்,  சுமார் 700 வருஷங்கள் கழித்து அவர்களைக் குறித்து ஆண்டவர் கூறும் போது,  எனக்கு விரோதமாய் கலகம் பண்ணினார்கள் (Rebellious Children) என்று கூறுகிறதைப் பார்க்கமுடிகிறது.  யூதாவின் குடிகள் கர்த்தருக்கு விரோதமாய் எழும்பி,  துன்மார்க்கமான கிரியைகளை நடப்பித்து,  அவருக்கு கோபமூட்டினார்கள். கர்த்தருடைய பிள்ளைகளே,  நாம் நம்முடைய பரம தகப்பனைக் கனப்படுத்துகிற பிள்ளைகளாய் காணப்படுகிறோமா? இல்லையேல் அவருக்கு விரோதமாய் கலகம் பண்ணுகிறவர்களாய் காணப்படுகிறோமா? அவருக்குப் பிரியமில்லா காரியங்களைச் செய்யும் போது,  அவருடைய சத்தத்திற்குச் செவிசாய்க்காமல் காணப்படும்போது,  வேதப்பிரமாணங்களுக்கு  விரோதமான காரியங்களைச் செய்யும் போது,  விவாக மஞ்சத்தை அசுசிப்படுத்தும் போது,  பரம தகப்பனுக்கு விரோதமாய் கலகம் பண்ணுகிறோம் என்பதை மறந்துவிடாதிருங்கள்.  நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? என்று சேனைகளின் கர்த்தர் நம்மைப் பார்த்துக் கேட்கிறார்.

மனுஷன் கர்த்தருடைய சத்தத்திற்கு செவிகொடாமல் காணப்படும் போது,  அவர் வானங்களையும்,  பூமியையும் பார்த்துப் பேசுகிறவர். காரணம் மனுகுலத்தைத் தவிர மற்ற சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து மேசியாவின் வெளிப்படுதலுக்காகப்  பிரசவ வேதனைப்படுகிறது (ரோமர் 8:22). ஆனால் அவருடைய பிள்ளைகள் கலகம்பண்ணுகிறவாகளாய்  காணப்பட்டு,  அவருடைய வருகையை எதிர்கொள்ள ஆயத்தப்படாமல்,  அவருடைய வெளிப்படுதலை வாஞ்சிக்காதபடிக்கு ஜீவிக்கிறோம். ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி,  நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருப்பதினால் அவருடைய வருகையும் தாமதிக்கிறது. மாடு தன் எஜமானையும்,  கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்,  இஸ்ரவேலோ அறிவில்லாமலும்,  என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்று ஏசாயா 1:3ல் கர்த்தர் கூறினார். மாட்டிற்கும்,  கழுதைக்கும் கூட தன்னுடைய எஜமான் (Owner) யார் என்று தெரியும். ஆனால் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட அவருடைய பிள்ளையாகிய நமக்கு நம்முடைய தகப்பன் யார் என்ற உணர்வில்லாமலேயே ஜீவிக்கிறோம். அவர் யார் என்ற உணர்வு நமக்குள்ளாய் காணப்படுமே என்றால் இன்னும்  அவருக்குப்  பயந்து,  பயபக்தியோடு அவரைச் சேவித்து,   பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டு,  இப்பிரபஞ்சத்திற்குரிய வேஷம் தரியாமல்,  லௌகீக இன்பங்களை விட்டு ஒடி,  பிரித்தெடுக்கப்பட்ட ஜீவியம் செய்ய நம்மை அர்ப்பணிக்கிறவர்களாய் காணப்பட்டிருப்போம்.        

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
https://www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *