நிலைவரமான ஆவியை தாரும்:-

சங் 51:10. தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.

தாவீது பத்சேபாளுடன் பாவத்தில் ஈடபட்டபின்பு, நாத்தான் தீர்க்கதரிசி மூலமாக கர்த்தர் தாவீதுக்கு சுமார் 9 மாதங்களுக்கு பிறகு அவன் பாவத்தை உணர்த்தினார். பின்பு தாவீது மனம்திரும்பி, ஒப்புரவாகி ஆண்டவரிடம் கேட்டான், ஆண்டவரே எனக்கு நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும் என்பதாக. நிலைவரமான ஆவி என்றால் ஆங்கில வேதாகமத்தில் Right & Steadfast Spirit என்று எழுதப்பட்டிருக்கிறது. அதாவது நாம் ஒருமுறை பாவ மன்னிப்பை பெற்றுக்கொண்டபிறகு மீண்டுமாக அதே பாவத்தை செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக, அங்கும் இங்குமாக சாய்ந்துவிடாமல், பின்மாற்றம் அடையாமல் இருக்கும்படியாக ஆண்டவரிடம் நிலைவரமான ஆவியை பெற்றுக்கொள்வது.

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாக இருக்கிறோம் (ரோம 3:23). ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை (ரோம 3:9-12) என்று வசனம் சொல்லுகிறது. பாவத்தில் சிறிய பாவம், பெரிய பாவம் என்று இல்லை. பாவம் பாவம் தான். இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது 100% பரிசுத்தம். பள்ளிக்கூடங்களில் படிக்கும்போது 35%, 50%, 70% வாங்கினால் தேர்ச்சி அடைந்துவிடலாம். ஆனால் இயேசு எதிர்பார்ப்பது 100%. 99% வாங்கி இயேசு வைக்கிற தேர்வில் தோல்வி அடைந்தாலும் 1% வாங்கி தோல்வி அடைந்தாலும், தோல்வி தோல்வி தான். உதாரணத்திற்கு பள்ளிக்கூட பரீட்சையில் 70% வாங்கினால் தேர்ச்சி, ஆனால் கணக்கு படத்தில் ஒருவன் 67%ம் மற்றொருவன் 55%ம் எடுத்து தோல்வி அடைந்தால் இரண்டுபேரும் தோல்வி தான் அதை மாற்ற முடியாது. அப்படிதான் இயேசு எதிர்பார்க்கிற மதிப்பெண் 100%. அந்த உயரிய மதிப்பெண்ணை பெறுவதற்கு நாம் நம்முடைய சொந்த முயற்சியினால் ஒன்றும் செய்ய முடியாது. மாறாக இயேசுவுடைய கிருபையினாலும், இயேசுவின் இரத்தத்தினாலும் கழுவப்பட்டு 100% மதிப்பெண்ணை பெற்று விடலாம்.

ஒருமுறை இயேசுவிடம் ஒப்புரவாகி, கழுவப்பட்டு 100% மதிப்பெண்ணை வாங்கியபிறகு, சில வாரங்கள் கழித்தோ, அல்லது சில மாதங்கள் கழித்தோ அதே இச்சை வருமென்றால் மீண்டும் அந்த பாவத்தில் விழுந்துவிடாதபடிக்கு, உங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்படி நிலைவரமான ஆவியை பெற்றுக்கொள்ள வேண்டும். அநேக ஆவியின் வரங்களை கர்த்தர் கொடுக்கிறார். உற்சாகத்தின் ஆவி, ஞானத்தின் ஆவி, தூய்மையின் ஆவி அதுபோல கர்த்தர் நாம் நம்முடைய தரத்தில் உயர்ந்திருக்கும்படியாகவும், நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்படியாகவும் அவர் நிலைவரமான ஆவியை நமக்கு தருகிறார். கர்த்தர் தாவீதுக்கு நிலைவரமான ஆவியை கொடுத்த பிறகு அவன் மீண்டும் அதே மாதிரி பாவத்தை செய்யவில்லை. உங்களுக்கும் கர்த்தர் நிலைவரமான ஆவியை தருவார். உங்கள் தரம் உயர்த்திருக்கும்படியாக செய்வார். இயேசுவிடம் வாஞ்சையோடு கேளுங்கள்; நிலைவரமான ஆவியை பெற்றுக்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *