சங் 112:1. அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
மனிதர்களாகிய நமக்கு யார் கட்டளை கொடுத்தாலும் பிரியம் உண்டாவதில்லை. வேலைஸ்தலங்களில் ஆறுதலாக, பட்சமாக வேலை கொடுத்தால் செய்வோம்; ஆனால் அதே வேளைகளில் யாரவது கட்டளை கொடுத்தால் பிரியம் உண்டாவதில்லை. ஆனால் சங்கீதக்காரன் சொல்லுகிறார் கர்த்தருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாக இருக்கிற மனுஷன் பாக்கியவான் என்பதாக. ஏதோ ஆண்டவர் கொடுத்த 10 கட்டளைகளுக்கு மாத்திரம் கீழ்ப்படிந்தால் போதும், இயேசு மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் மலை பிரசங்கத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தால் மாத்திரம் போதும் என்று இருந்துவிடாமல் இயேசுவின் வார்த்தைகள் ஒவ்வொண்டிற்கும் கீழ்ப்படிந்து அவர் கட்டளைகளை கைக்கொள்வதில் பிரியம், ஆர்வம், வாஞ்சை நமக்குள்ளாக காணப்படவேண்டும்.
மாத்திரமல்ல அவர் கட்டளைகளை கைக்கொள்ளவேண்டும் என்பதே அவர் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிற காரியம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார் (உபா 10:13).
வேலைஸ்தலங்களிலும் உங்களை நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க பிரியமாய் இருங்கள். எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது (ரோமர் 13:1) என்று வசனம் சொல்லுகிறது.
யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டான்; இயேசு அநேகமுறை தம்முடைய சீஷர்களுக்கு கட்டளைக்கொடுத்து உபதேசித்தார்; இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள் (மத் 10:5,6). பாருங்கள் இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளை கொடுக்கிறார். இதுபோலத்தான் வேலைஸ்தலங்களிலும், ஊழியர்களில் உங்களை நடத்துகிற போதகர்களும் உங்களுக்கு கட்டளை கொடுக்கும்போது அதற்கு கீழ்ப்படிந்து நடக்க பிரியப்படுங்கள்.
அப்பொழுது நீங்கள் பாக்யவான்களாக இருப்பீர்கள். ஆங்கில வேதாகமத்தில் பாக்கியவான்கள் என்பதற்கு Fortunate, Prosperous , and Favoured by God என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆகையால் கர்த்தர் கொடுக்கும் கட்டளைகளை பிரியமுடன் ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிந்து நடங்கள். அப்பொழுது உங்களுக்கு அதிர்ஷ்டம், வளம், கர்த்தரின் தயவு இருக்கும்படியாக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

