உங்களிடத்திலிருந்து ஜீவஊற்று புறப்படும்:-

நீதிமொழிகள் 4:23 எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.

சாலமொன் ஞானி சொல்லுகிறார் நாம் எல்லா காவலோடும் இருதயத்தை காத்துக்கொள்ளவேண்டும் என்பதாக. நம்முடைய இருதயம் நாம் காண்கிறவைகளால், கேட்கிறவைகளால், பேசுகிறவைகளால் அசுசிப்படக்கூடும். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று வசனம் சொல்லுகிறது. வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் (மத் 15:18). நாம் நம்முடைய செவிகளை, கண்களை மற்ற எல்லா காரியங்களிலும் கிறிஸ்து விரும்பும் வண்ணமாக செய்ய கவனமாய் இருப்போமென்றால் இருதயத்தை காத்துக்கொள்ள முடியும். அப்படிப்பட்டவர்களிடமிருந்து ஜீவஊற்று புறப்படும்.

ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம் (சங்கீதம் 36:9) என்று சங்கீதக்காரன் சொல்லுவதை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். ஆண்டவரிடத்திலிருக்கும் ஜீவஊற்று உங்களிடத்திலுமிருந்தும் புறப்படும்.

மாத்திரமல்ல ஜீவஊற்று உங்களை மரணகண்ணிகளிலிருந்து தப்புவிக்கும். கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம் (நீதி 14:27 ). சத்துரு உங்களுக்கு விரோதமாக விபத்தை உண்டுபண்ண நினைக்கலாம், விழத்தள்ள நினைக்கலாம், வேண்டாத ஆபத்துக்களை உண்டாக்கி மரணம் நெருடும்படியாக செய்யலாம். ஆனால் ஜீவஊற்று அப்படிப்பட்ட மரணகண்னிகளிலிருந்து உங்களை தப்புவிக்கும்.

சமாரிய ஸ்திரி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் மொண்டுகொள்ள வந்தாள். இயேசு அவளிடம் தாகத்துக்கு தா என்று கேட்டார். இயேசு ஜீவத்தண்ணீரை குறித்த வெளிப்பாட்டை அந்த ஸ்திரியிடம் கூறினார். உலகத்தில் உண்டாகும் தண்ணீரை குடித்தால் மீண்டும் தாகம் உண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். இருதயம் ஆயத்தமாய் இருந்தால், இயேசுவின் வார்த்தைக்கு செவிகொடுக்க ஆயத்தமாய் இருந்தால், உங்களுக்குள்ளாக இருக்கிற ஜீவஊற்று நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும். தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். உலகத்திலிருக்கும் தண்ணீர் வாங்க பணம் தேவைப்படுகிறது. ஆனால் இயேசு சாதாரண தண்ணீர் அல்ல, ஜீவ தண்ணீரை இலவசமாக தர விருப்பமுள்ளவராய் இருக்கிறார். அது உங்களிடத்திலிருந்து ஜீவஊற்றாய் புறப்படும். உங்களிடத்திலிருந்து புறப்படும் ஜீவஊற்று உங்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பது மாத்திரமல்ல மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *