சொல்லிமுடியாத ஈவு. (Unspeakable Gift)

தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம் (2 கொரி. 9:15).

ஒரு வருடத்தின் பதனொரு மாதங்களை ஓடிமுடித்து  பன்னிரண்டாவது  மாதத்திற்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தைக் கர்த்தர் நமக்குக் கொடுத்தார். இந்த வருஷத்தைத் துவங்கின அனேகர் இந்நாட்களில் நம்மோடு இல்லை. ஆனால் கர்த்தர் கிருபையாய் நம்மை உயிரோடு வைத்திருப்பது அவருக்கு  துதிப்பலிகளையும்,  ஸ்தோத்திர  பலிகளையும்  ஏறெடுப்பதற்காக என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

ஒவ்வொரு வருஷங்களின் பன்னிரண்டாவது மாதம் என்பது எல்லா கர்த்தருடைய பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சியின் மாதமாகும். இயேசு பாலகனாய் இந்தப் பூவில் அவதரித்த நாளைக் நினைவு கூர்ந்து கொண்டாடுகிற மாதமாகும். ஒருவேளை கர்த்தர் பிறந்த சரியான நாளை நாம் அறியாதவர்களாய் காணப்பட்டாலும் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ஒரு விஷேசித்த நாளை நியமித்துக் கொள்வதில் தவறில்லை (ரோமர் 14:5). தேவன் நமக்கு அருளிய சொல்லி முடியாத ஈவுகள் அனேகம் காணப்பட்டாலும் அவைகளில் முக்கியமான ஈவு, தன்னுடைய ஒரே பேரான குமாரனை நமக்காகத் தந்ததாகும். அந்த ஈவின் மேன்மையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16ல் எழுதப்பட்டிருக்கிறது. அந்த அன்பின் அகலத்தையும்  ஆழத்தையும் நீளத்தையும் உயரத்தையும்  வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. கர்த்தருடைய பிள்ளைகளே, இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பாக தேவன் ஈவாய் கொடுத்து இயேசு கிறிஸ்துவை, உங்களது விலையேறப்பெற்ற  பரிசுப்  பொருளாகக் கருதுகிறீர்களா? உன்னதத்தின் மேன்மைகளைத் துறந்து, பிதாவின் செல்லப்பிள்ளையாய் காணப்படுவதை இழந்து, நம்மை இரட்சிக்கும் படிக்குப் பூமியில் பிறந்தவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டீர்களா? இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்,  பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்று கூறுகிற தேவதூதனுடைய சத்தம் உங்கள் செவிகளில் விழுகிறதா? இயேசு கிறிஸ்துவையும், அவர் அருளிய இரட்சிப்பையும் விலைகொடுத்து வாங்கமுடியாது. இயேசுவே என் இருதயத்தில் வாரும், என்னை நீர் ஆளுகைச் செய்யும் என்று நாம் ஏறெடுக்கிற சிறிய ஜெபம் ஆண்டவரை உங்கள் இருதயத்தில் இரட்சகராக பிறக்கும் படிக்குச் செய்யும். அவர் உங்கள் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போது உங்கள் பாவத்தின் பாரங்கள் உங்களைவிட்டு அகலும்.  சமாதானப்பிரபுவின்  சமாதானம் உங்கள்  இருதயங்களை  நிரப்பும். ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பெட்டி காணப்பட்ட வேளையில் அவன்  ஆசீர்வதிக்கப்பட்டதைத்  தேசத்தின்  குடிகளுடைய கண்கள் கண்டது. அதுபோல் இயேசு உங்கள் இருதயங்களில் பிறக்கும் போது, மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கர்த்தர் உங்களுக்கு அருளிச்செய்வார்.

கர்த்தருடைய பிள்ளைகளே! தேவன் தன்னுடைய குமாரனை  ஈவாகத் தந்ததற்காக எந்நாளும் அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்துங்கள். நம்மை இரட்சித்ததற்காக  நமதருமை  ஆண்டவராகிய  இயேசுகிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரபலிகளை ஏறெடுங்கள். இம்மட்டும் நம்முடைய வாழ்க்கையில் தேவன் அருளிய நன்மைகளுக்காக அவருக்கு எப்போதும்.நன்றிப் பலிகளை ஏறெடுங்கள்.  அதுவே நீங்கள் எந்நாளும் ஆசீர்வதிக்கப்பட்டு உயர்த்தப்படுவதின் இரகசியமாகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *