ஏசா 7:14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்று கேட்டார்கள். சீஷர்கள் உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்று அடையாளத்தை கேட்டார்கள். ஆண்டவர் மோசேயிடம் அடிமைத்தனத்திலிருக்கும் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்துவர நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு சில அடையாளங்களை கர்த்தர் மோசேக்கு கொடுத்தார். அதுபோல தான் இயேசு பிறக்கபோவதற்கு ஒரு அடையாளத்தை கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலமாக சொன்னார். அந்த ஒரு அடையாளம் என்னவென்றால் கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்பது தான். ஏசாயா மூலம் உரைக்கப்பட்ட இந்த தீர்க்கதரிசனத்தை கேட்டவர்கள் அப்பொழுது நினைத்திருப்பார்கள் இது எப்படி ஆகும். கன்னிகை எப்படி கர்ப்பவதி ஆகக்கூடும். இதுவரைக்கும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்ததில்லையே. இது ஒரு ஆச்சரியமான அடையாளமாக காணப்படுகிறதே என்று அனைவரும் நினைத்திருக்கலாம். இப்படித்தான் ஆண்டவர் உங்களால் கிரகிக்ககூடாத அடையாளங்களை காண்பிக்கக்கூடும். இவைகள் இயற்கையாக நடக்ககூடுமா என்று நீங்கள் நினைக்கலாம். நம்முடைய ஆண்டவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவர். குறித்த காலத்தில் அந்த ஒரு அடையாளம் நிறைவேறியது. இயேசு ஒரு கன்னிகையின் வயிற்றிலிருந்து பிறந்தார்.
இயேசு உங்கள் வாழ்க்கையிலிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற அவர் கொடுக்கும் ஒரு சில அடையாளங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளாக இருக்கலாம். இருந்தாலும் கர்த்தர் அடையாளங்களின்படி உங்கள் தேவைகளை சந்திப்பார். காரணம் அவர் வழியே இல்லாத இடங்களில் வழியை உண்டுபண்ணுகிறவர். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல அழைப்பவர். வனாந்தரத்தை செழிப்பாக மாற்றுபவர். ஒன்றுமில்லாமையிலிருந்து அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்தவர். அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்பவர். ஸ்தேவான் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான் என்று வசனம் சொல்லுகிறது. அதுபோல உங்களையே அடையாளங்களை செய்கிறவர்களாகவும் மாற்றுவார். இயற்கைக்கு அப்பாற்பட்ட அந்த ஒரு அடையாளம் நிறைவேறி இயேசு இந்த உலகத்தில் மானிடனாக பிறந்தது உண்மையென்றால், உங்களுக்கு கர்த்தர் கொடுக்கும் அடையாளங்களும் நிறைவேறும்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

