1 இராஜா 4:29. தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார்.
சாலொமோன் இளைஞனாக இருக்கும்போது அவன் கர்த்தரிடம் ஞானத்தை கேட்டான். கர்த்தருடைய பார்வைக்கு அவன் கேட்ட காரியம் அருமையாய் இருந்தது. இன்றைய இளைஞர்களிடம் சென்று நீங்கள் கர்த்தரிடம் ஒன்று கேட்கவேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள் என்று கேட்டால், அநேகர் அநேக விதமாக கேட்பார்கள். சிலர் எனக்கு உயர்த்த பதவி வேண்டும், நல்ல வேலை வேண்டும், நல்ல மனைவி வேண்டும், ஐஸ்வரியம் வேண்டும், வாகனம் வீடும் வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் சாலொமோன் வாலிப வயதில் கர்த்தரிடம் ஜனங்களை நடத்தும்படிக்கு தேவையான ஞானத்தை கேட்டான். கர்த்தர் அவன் கேட்ட ஞானத்தை கொடுத்தார்.
இரண்டு வெவ்வேறு தாய்க்கு பிறந்த இரண்டு பிள்ளைகள் சம்பவத்தில் சாலொமோன் தீர்த்த நியாயத்தை கேட்டு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்கு பயந்தார்கள். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; ஆயிரத்து ஐந்து பாடல்களை பாடினான். பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள். சேபாவின் ராஜஸ்திரி சாலொமோனின் ஞானத்தை சோதிப்பதற்கு அவனிடம் விடுகதைகளை கேட்டாள். சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான். அவள் சாலொமோனின் ஞானத்தையும் மற்ற காரியங்களையும் கண்டு ஆச்சரியத்தால் பிரம்மைகொண்டாள்.
இப்படியாக இந்நாட்களில் இருக்கும் யாவரும் கர்த்தரிடம் ஞானத்தையும், புத்தியையும், மனோவிருத்தியையும் கேட்கவேண்டும். அறிவு என்பது பாட புத்தகங்களையோ, மற்ற அநேக புத்தகங்களையோ படித்து பெருக்கி கொள்வது. ஆனால் ஞானம் என்பது அது தேவனிடமிருந்து வரவேண்டிய காரியம். புத்தியையும் (Descerment and breadth of mind) கர்த்தரிடம் கேட்கவேண்டும். பகுத்தறிந்து பார்க்கக்கூடிய விசேஷித்த அறிவு. மனோவிருத்தியையும் (largeness of heart) கேட்கவேண்டும். நம்முடைய கருத்து தான் சரி, மற்றவர்களின் கருத்துக்கள் மூலம் அவர்களை இடித்து தள்ளாத குறுகிய மனப்பான்மையில் இல்லாமல் இருக்கவேண்டும். ஒரு போதகர் ஒரு பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது, அவள் தன் கழுத்தில் தங்கம் அணிந்திருந்தாள். உடனே அவர் இது கூடாது. தங்கம் அணிந்து வந்த பெண்ணுக்கு நான் ஞானஸ்நாணம் கொடுப்பதில்லை என்றார். அப்பொழுது கர்த்தர் அந்த ஊழியக்காரரிடம் கேட்டார், நான் ஏற்றுக்கொண்ட ஒரு நபரை நீ எப்படி நிராகரிக்கலாம் ?. அவர் உடனே அவளுக்கு ஞானஸ்நாணம் கொடுத்தார். கருத்து வேறுபாடுகளை அறிந்து சரியான விதத்தில் நடந்துகொள்ளக்கூடிய மனோவிருத்தியையும் கர்த்தரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

