அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது (2 நாளா. 19:2).
யெகூ என்ற ஞானதிருஷ்டி காரன் யோசபாத் என்ற யூதாவின் ராஜாவைப் பார்த்துக் கேட்ட கேள்வியாக மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. யோசபாத் கர்த்தருடைய கற்பனைகளின் படி நடந்தவன், கர்த்தருடைய காரியங்களை உற்சாக மனதோடு செய்தவன், கர்த்தருடைய வேதபுஸ்தகத்தை யூதாவின் பட்டணங்களில்;லெம் திரிந்து ஜனங்களுக்கு உபதேசம் பண்ணுவதற்கு லேவியர்களையும் ஆசாரியர்களையும் நியமித்தவன். இப்படிக் கர்த்தரைப் பிரியப்படுத்துகிற அனேக நற்குணங்கள் அவனில் காணப்பட்டதினால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்து மிகுந்த ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுத்தார். கர்த்தருடைய பிள்ளைகள் தேவனுடைய ராஜ்யத்திற்குரியவற்றையும், அவருடைய நீதியையும் முதலாவது தேடும் போது, அவர் உங்களை ஆசீர்வதித்துக் கேட்பதையும் கேளாததையும்; கொடுத்துக் கனப்படுத்துகிறவர். ஆகையால் கர்த்தருடைய வசனங்களின்படி உங்கள் வாழ்க்கையைக் கட்டி எழும்புங்கள், உற்சாக மனதோடு அவருடைய பணியைச் செய்யுங்கள், சமயம் வாய்த்தாலும் வாய்க்கவில்லையென்றாலும் கர்த்தருடைய வார்த்தையை மற்றவர்களுக்குக் கருத்தாய் சொல்லுங்கள்.
யோசபாத் ஆசீர்வதிக்கப்பட்ட வேளையில், அவன் ஆகாப் என்ற இஸ்ரவேலின் ராஜாவோடு சம்பந்தம் கலந்தான். ஆகாப் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தவன், ஆகாபின் மனைவி யேசபேல் இஸ்ரவேல் தேசம் முழுவதும் பாகாலுக்கு பலிபீடம் கட்டி, ஜனங்களை கர்த்தரைத் விட்டுப் பிரித்தவள், தேசத்தை பாகாலின் தீர்க்கதரிசிகளால் நிறைத்து, கர்த்தருடைய தீர்க்கதரிகளைக் கொன்று போட்டவள். ஆகாபும் அவன் மனைவியோடு சோந்து பாகாலைச் சேவித்து அவைகளுக்குப் பலிபீடங்களைக் கட்டினான். இப்படிப்பட்ட துன்மார்க்கனோடு கர்த்தருக்குப் பயந்த யூதாவின் ராஜாவாகிய யோசபாத் சம்பந்தம் கலந்து, ஆழமான நட்பு பாராட்டினான். யோசபாத், ஆகாபைத் தேடி சமாரியாவிற்கு கடந்து சென்றான். அங்கே அவனுக்கு ஆகாப் பெரிய விருந்தை ஆயத்தம் செய்து அவனை மகிழ்வித்தான். கர்த்தருடைய பிள்ளைகளே, யாரோடு நீங்கள் நட்பு பாராட்டுகிறீர்கள், உங்கள் ஐக்கியம் எப்படிப்பட்டவர்களோடு காணப்படுகிறது, அந்நிய நுகங்களில் அவ்விசுவாசிகளோடு பிணைக்கப்பட்டிருக்கிறீர்களா? கர்த்தருக்கு விரோதமானவர்களோடு விருந்துண்டு மகிழ்கிறவர்களாகக் காணப்படுகிறீர்களா? கர்த்தருடைய ஆவியானவர் உங்களை எச்சரிக்கிறார் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு தன்னோடு வந்து சீரியர்களோடு யுத்தம் செய்ய வரும்படிக்கு யோசபாத்தை ஏவினான், நயங்காட்டினான். கர்த்தருடைய ஜனங்கள் சத்துருவின் நயங்காட்டுதலுக்கு ஒருநாளும் இடம் கொடாதிருங்கள். அவன் ஏவாளை வஞ்சித்தவன், தாவீதை ஏவி ஜனங்களைத் தொகையிடும்படிச் செய்தவன், யூதாசுக்குள் புகுந்து பண ஆசையைக் காட்டி இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் படிக்குச் செய்தவன். யோசபாத் சத்துருவின் வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாமல் நான் தான் நீர், என் ஜனம் உன்னுடைய ஜனம், யுத்தத்திற்குப் போவோம் என்று கூறி அவனோடு யுத்தத்திற்கு போனான். அவன் கர்த்தருடைய வார்த்ததையை தீர்க்கதரிசிகளிடம் விசாரித்து அறியும் என்ற ஒரு நல்ல ஆலோசனையை ஆகாபுக்கு கொடுத்தான். ஆகாப் பாகாலின் நானூறு தீர்க்கதரிசிகளை அழைப்பித்தான், அவர்கள் எல்லாரும் நீர் போம், உமக்கு வாய்க்கும் என்று தீர்க்கதரிசனம் சொன்னார்கள். சிதேக்கியா என்ற கள்ள தீர்க்கதரிசி இரும்புக் கொம்பு கொண்டு சீரியர்களை முட்டி மோதி அழிப்பீர் என்றான். கர்த்தருடைய பிள்ளைகளே, கள்ளத்தீர்க்களையும், கள்ள போதகர்களையும் அறிந்து கொள்ளுகிற வழிகளில் ஒன்று, எப்போதும் உங்களுக்கு நயங்காட்டுகிற, ஆசீர்வாதமான, வஞ்சகமான வார்த்தைகளைக் கூறி உங்களை மகிழப்பண்ணுவார்கள். ஆகையால் தான் அதிக உறுதியான தீர்க்கதரிசனமாகிய கர்த்தருடைய வார்த்தையைப் பிடித்துக் கொள்ளுங்கள், அப்போது நீங்கள் இடறுவதில்லை. யோசபாத் கள்ளத்தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் கர்தரிடத்திலிருந்து வரவில்லை என்பதைப் பகுத்தறிந்து, வேறு கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் யாருமில்லையா என்று ஆகாபிடம் வினவினான். அவன் மிகாயா என்று ஒருவன் உண்டு, ஆனால் அவன் என்னைப் பற்றி நன்மையானதை ஒருநாளும் கூறுவதில்லை என்றான். யோசபாத் கேட்டுக்கொண்டதின் நிமித்தம் அவனை அழைப்பித்தான். மிகாயா கர்த்தருடைய வார்த்தையை உண்மையாய் கூறுகிறவன், இஸ்ரவேலர் மேய்ப்பனில்லாத ஆடுகள் போலக் காணப்பட்டதைக் கண்டேன், கர்த்தர் ஆகாப்பைக் குறித்து தீமையானதைச் சொன்னார் என்றான். ஆனாலும் யோசபாத் கர்த்தருடைய வார்த்தையைப் பார்க்கிலும் ஆகாபுடைய நட்பை அதிகமாய் கருதினதினால் யுத்தத்திற்கு அவனோடு புறப்பட்டான். தெலிலாளின் நட்பு சிம்சோனின் ஊழிய அழைப்பை மறக்கும் படிக்குச் செய்தது. கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் நட்புகள் நீங்கள் கர்த்தருடைய சமூகத்திற்கு வருவதற்குத் தடையாக இருந்தால் உதறித் தள்ளுங்கள், பாரமாய் தோன்றுகிற எல்லா நட்புகளையும் விட்டு விலகுங்கள்.
ஆகாப், யோசபாத்திடம் நீர் ராஜவஸ்திரம் அணிந்து யுத்தத்தில் பிரவேசியும், நான் சாதாரண போர் சேவகனின் வஸ்திரத்தோடு யுத்தத்தில் பிரவேசிக்கிறேன் என்றான். அப்போதும் சத்துருவின் கண்ணியை அறியாதவனாக யோசபாத் காணப்பட்டான். சீரியாவின் ராஜா தன் யுத்த வீரர்களுக்கு ஒரு கட்டளையைக் கொடுத்திருந்தான், நீங்கள் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடு மாத்திரம் யுத்தம் பண்ணுங்கள் என்று. ஆகையால் சீரிய ராணுவம் முழுவதும் ராஜவஸ்திரம் தரித்த யோசபாத்தை சூழ்ந்துகொண்டது. ஆகையால் ஆபத்தான வேளையில், உதவிக்காகக் கூக்குரலிட்ட நேரத்தில், ஆகாப் உதவிக்கு வரவில்லை, ஆனால் கர்த்தர் யோசபாத்திற்கு உதவியாக வந்து எதிரிகள் விலகும் படிக்குச் செய்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நம்முடைய ஆண்டவர் நல்லவர், நாம் தவறுகள் செய்தாலும் நமக்கு உதவி செய்கிறவர், நம்முடைய இக்கட்டுகளில் நமக்கு துணையாய் நிற்கிறவர். அந்த யுத்தத்தில் ஆகாப் மரித்து போனான், ஆனால் யோசபாத்தின் உயிரை அவன் கர்த்தருக்காகப் பாராட்டின நற்கிரியைகளின் நிமித்தம் கர்த்தர் தப்புவித்தார். கர்த்தருடைய பிள்ளைகளே, நீதியாய் ஜீவியுங்கள். உங்கள் நீதி உங்களுக்கு முன்பாகச் சென்று உங்களை இக்கட்டுகளிலிருந்து பாதுகாக்கும்.
யோசபாத் ஆபத்தில் தப்புவிக்கப்பட்ட பின்பும், அதிலிருந்து கற்றுக் கொள்ளாமல், ஆகாபின் குமாரனாகிய அகசியாவோடு தோழமைப் பண்ணினான். அவனோடு சேர்ந்து கப்பல் கட்டினான். எலியேசர் என்ற கர்த்தருடைய தீர்க்கதரிசி அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்தான், ஆகையால் கர்த்தர் அவனுடைய கையின் கிரியை முறித்துப் போட்டர், ஆகையால் அவர்கள் கட்டின கப்பல் உடைந்து போயிற்று. கர்த்தருடைய பிள்ளைகளே உங்கள் நட்பு துன்மார்க்கர்களோடும், கர்த்தரை பகைக்கிறவர்களோடும் காணப்பட்டால், அவர்கள் நிமித்தம் உங்கள் கரத்தின் கிரியைகளையும் கர்த்தர் முறித்து போடுவார். ஆகையால் உங்கள் உறவு வட்டாரங்களை இன்றே சோதித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் தோல்விகள் மேல் தோல்விகள் காணப்படுகிறதா? உங்கள் நட்புகள் யாரோடு காணப்படுகிறது என்பதைச் ஆராய்ந்து பாருங்கள். ஒருநாளும் துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களோடு நட்பு பாராட்டாதிருங்கள், அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்துக் கனப்படுத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

