தவறான நட்புகளும்,   நஷ்டங்களும்.

மரேசா ஊரானாகிய தொதாவாவின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர்  அகசியாவோடே  கூடிக்கொண்ட படியினால்,   கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான், அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று,   அவர்கள்  தர்ஷீசுக்குப்  போகக்கூடாமற்போயிற்று (2 நாளா. 20:35).

தேவன்,   நம்முடைய கரங்களின் கிரியைகளை ஆசீர்வதிக்கிறவர். ஆபிரகாம் ஒருவனாயிருக்கையில் அவனை அழைத்து,   அவன் கரத்தின் கிரியைகளை ஆசீர்வதித்து,   அவனைப் பெருகப்பண்ணினார். பஞ்ச காலத்தில் கூட ஈசாக்கு விதை விதைத்த வேளையில் நூறு மடங்கு அறுவடையைப் பெருகப்பண்ணி அவனை ஆசீர்வதித்தார். வெறும் கோலும்,   தடியோடும்  பதான் அராமுக்கு  சென்ற  யாக்கோபின்  கரங்களின் கிரியைகளை ஆசீர்வதித்து,   அவனை இரண்டு பரிவாரங்களை உடையவனாக்கினார். இரா முழுதும்  பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படாதிருந்தும்,   இயேசுவின் வார்த்தையின்படி வலையைப் போட்ட வேளையில்  வலைகிழியத்  தக்கதாக மீன்களைக் கொடுத்து,   பேதுருவின் கரங்களின் கிரியைகளை ஆசீர்வதித்தார்.  அதுபோல நீங்களும் கர்த்தருக்கு பிரியமான ஜீவியம் செய்து,   அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியும் போது,   உங்கள் கரங்களின் கிரியைகளை ஆசீர்வதிப்பார்.

சில வேளைகளில்,   கர்த்தர் கரங்களின் கிரியைகளை   முறித்தும் போடுகிறார். தங்களுக்குப் பேர் உண்டாக மேட்டிமையின் நிமித்தம் பாபேலில் கோபுரத்தைக் கட்டின வேளையில்,   அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்கி,   அவர்களைச் சிதறி போகப்பண்ணினார். ஆலயம் கட்டுவதற்கு  செருபாபேலின் தலைமையின் கீழ்சென்றவார்கள்,   எதிர்ப்பின் நிமித்தம்,    தானியங்களை  விதைக்கவும்,   வீடுகளைக் கட்டவும் துவங்கினார்கள். கர்த்தர் அவர்களின் கரங்களின் கிரியைகளை ஊதிப்போட்டார்,   அதிகமாய் வரும் என்று எதிர்பார்த்தார்கள்,   ஆனால் கொஞ்சம் தான் வந்தது. கர்த்தருடைய வீடு பாழாய்க் கிடந்த வேளையில்,   அதைக்குறித்த கரிசனை இல்லாமல் காணப்பட்டதினால் கரங்களின் கிரியைகளை அழித்துப் போட்டார். யோசபாத் கர்த்தருக்குப் பயந்த யூதாவின் ராஜா,   அவன் துஷ்டனாய் காணப்பட்ட  ஆகாப்  என்ற  இஸ்ரவேலின் ராஜாவோடும்,   அவன்  மரித்தபின்பு  அவனுடைய குமாரனாகிய அகசியாவோடும் நட்பு பாராட்டினான். ஆகையால் அவனுடைய கரங்களின் கிரியைகளைக் கர்த்தர் முறித்துப் போட்டார்.

கர்த்தருடைய பிள்ளைகள் யாரோடு தோழமையும்,  நட்பும் பாராட்டுகிறீர்கள் என்பதைச் சோதித்துப் பார்க்க   வேண்டும். கூடாநட்புகளின் நிமித்தம் கர்த்தர் உங்கள் கரங்களின் பிரயாசங்களை முறித்துப்போடுவார்,  உங்கள் காரியங்கள் வாய்க்காமல் போகும் படிக்குச் செய்வார். ஆகையால் நீங்கள் யாரோடு இணைந்து காரியங்களைச் செய்கிறீர்கள் என்பது முக்கியம். தொடர்ந்து தோல்விகளும்,  வீழ்ச்சிகளும் காணப்படுகிறதா? வாழ்க்கையில்  முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறீர்களா? உங்களுடைய நட்புகள் யாரோடு காணப்படுகிறது என்பதையும்,  யாரோடு இணைந்து காரியங்களை நடப்பிருக்கிறீர்கள் என்பதையும் சோதித்துப் பாருங்கள். 

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *