அதுமுதல் இயேசு, மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார் (மத்தேயு 4:17).
இயேசுவின் முதல் பிரசங்கம் மனந்திரும்புங்கள் என்பதாகும். அதுபோல யோவான்ஸ்நானகனும் மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கித்தான். அப்போஸ்தலர்களுடைய பிரசங்கத்தின் முக்கியமான கருத்தும் மனந்திரும்புங்கள் என்பதாக் காணப்பட்டது. மனந்திரும்புதல் என்றால் என்ன? நாம் பழகிப் போன, செய்து கொண்டிருக்கிற காரியங்களைத் தவறு என்று கண்டு இருதயத்தில் குத்துண்டு, நமக்குள் ஏற்படுகிற ஒரு திருப்பமாகக் காணப்படுகிறது. பாவப் பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு தேவனுக்கு நேராக முழுவதும் திரும்புவதாகும். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ஏற்படுகிற 180° திருப்பத்தைத்தான் மனம் திரும்புதல் என்று கூறுகிறோம்.
மனந்திரும்பினவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது, மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கிறவர்களாகக் காணப்படுவார்கள் (லூக்கா 3:8), அதுபோல மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளையும் செய்வார்கள்(அப். 26:20). சகேயு, இயேசுவைப் பார்க்கும் படிக்கு அத்தி மரத்தில் ஏறி மறைந்திருந்தான். இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு, சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே இயேசுவை அழைத்துக்கொண்டு போனான். சகேயு கர்த்தரை நோக்கி, ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கின துண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது, இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறான் என்றார். அவன் அநியாயமாய் சம்பாதித்த எல்லாவற்றையும் ஏழைகளுக்கு கொடுத்தும்விடும்படிக்கு தீர்மானித்தான். அது அவனுக்குள் ஏற்பட்ட மெய் மனந்திரும்புதலைக் காட்டுகிறது. ஆகையால் இரட்சிப்பைச் சுதந்தரித்தான், அத்துடன் ஆபிரகாமின் அத்தனை ஆசீர்வாதங்களையும் கிறிஸ்துவின் மூலமாகப் பெற்றுக் கொள்ளுகிறவனுமாகக் காணப்பட்டான். சிலுவைக் கள்ளனும் கூட கடைசி நேரத்தில், தன்னுடன் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை ஆண்டவராகவும், தன்னை ஆளுகிற ராஜாவாகவும் கண்டான், அவருக்கு ஒரு ராஜ்யம் காணப்படுகிறது என்றும் விசுவாசித்தான். ஆகையால், ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று வேண்டுதல் செய்தான். இயேசு அவனை நோக்கி, இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அவனுடைய வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் கிடைத்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டான், தேவனுடைய ராஜ்யத்தையும் சுதந்தரித்துக் கொண்டான்.
இந்நாட்களில் மனந்திரும்பினேன் என்று சொல்லுகிற கிறிஸ்தவர்களைப் பார்க்கும் போது, அவர்களுக்குள் மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளையும், அதற்குரிய கிரியைகளையும் பார்ப்பது கடினமாக் காணப்படுகிறது. மனந்திரும்பினேன் என்றும் சொல்லியும், பழைய கசப்புகளும், மேட்டிமைகளும், வைராக்கியங்களும், மாம்சீக கிரியைகளும் காணப்படுகிறது. லஞ்சங்கள் வாங்குவதும், நீதியைப் புரட்டுவதும், கடன் வாங்குவதும், தகுதியாயிராதக் காரியங்களில் தலையிடுவதும் கர்த்தருடைய ஜனங்களுக்குள் காணப்படுகிறது. மனந்திரும்பினேன் என்று கூறியும், அதற்கு அடையாளமாக, பாவங்கள் கழுவப்படுதற்கு ஞானஸ்நானத்தையும் எடுத்த பின்பும், வாழ்க்கை முறைமைகளில் மாற்றத்தைப் பார்க்கமுடியவில்லை. நாம் மனந்திரும்பி பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியாது என்று ஆண்டவர் கூறினார். ஆகையால் மிகவும் சமீபமாகக் காணப்படுகிற தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்கு, மெய் மனந்திரும்புதல் உடையவர்களாகக் காணப்படக் கர்த்தர் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

