ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்கள்:-

எபே 1:3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் தனது கடிதத்தை நீட்டிக்கப்பட்ட ஆசீர்வாதத்துடன் ஆரம்பிக்கிறார். பவுல் மூச்சு நிற்காமல் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பற்றிய அறிவிப்புகளை தொடர்ந்து இந்த அதிகாரத்தில் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதமும் இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுவதன் மூலம் கிறிஸ்தவர்கள் பெற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். பிதாவாகிய தேவன் ஒவ்வொரு ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கும் உரிமையாளராகவும் மற்றும் ஆதாரமாக இருக்கிறார். இந்த உன்னதத்திற்குரிய ஆசிர்வாதத்தை கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் வைத்திருக்கிறார். தேவ குமாரனாகிய இயேசுவை நாம் அடையாளம் கண்டுகொள்வதன் மூலமும், அவருடன் இணைவதன் மூலமும் மட்டுமே அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற நாம் தகுதியுடையவர்கள். இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நம்முடைய வாழ்வில் செயல்படுத்துபவர் பரிசுத்த ஆவியானவர். ஆகையால் இந்த உன்னதமான ஆசிர்வாதத்தை சுதந்தரிக்கு ஒவ்வொருவரும் வாஞ்சிக்க வேண்டும்.

முதலாவதாக, ஆவிக்குரிய ஆசிர்வாதமாகிய மீட்பை முதலாவது நாம் அடைகிறோம். பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளுகிறோம். இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் அவருடைய பிள்ளைகளாக தெரிந்தெடுக்கப்பட்டது உன்னதமான ஆசீர்வாதம். கோடான கோடி ஜனங்களுக்கு இல்லாத சிலாக்கியமாக இது காணப்படுகிறது. கர்த்தர் நம்மை மீட்டெடுத்து அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திர சுவிகாரத்தின் ஆவியை கொடுத்திருப்பது மேன்மையான ஆவிக்குரிய ஆசீர்வாதமாக காணப்படுகிறது.

அடுத்தது, இயேசு கிறிஸ்துவின் கிருபை நம் அனைவருக்கும் ஒவ்வொருநாளும், காலைதோறும் கிடைப்பது பெரிய ஆசீர்வாதமாக காணப்படுகிறது. இஸ்ரவேல் ஜனங்களுக்கு காலை தோறும் தேவ தூதர்கள் உண்ணும் உணவு கிடைத்ததுபோல, நமக்கு ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபை கிடைக்கிறது. அவர் கிருபை என்னும் ஆவிக்குரிய ஆசிர்வாதத்தை நமக்கு கொடுக்காமல் இருப்பாரே என்றால், நாமெல்லாரும் என்றோ அக்கினி கடலுக்கு நேராக சென்றிருப்போம். ஆனால் கர்த்தர் இன்னும் நம்மை காத்து நடத்துவது அவருடைய மாறாத கிருபை.

அடுத்து, அவர் தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை நமக்கு அறிவிப்பதும் ஆசீர்வாதமாக காணப்படுகிறது. ஆபிரகாமுக்கு ஆண்டவர் எதையும் மறைக்கவில்லை. அதுபோல ஆவிக்குரிய இரகசியங்களை கர்த்தர் அவருடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் வெளிப்படுத்துகிறவராக காணப்படுகிறார்.

மாத்திரமல்ல, வசனம் சொல்லுகிறது வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள் என்று. பரிசுத்த ஆவியினால் முத்திரை போடுவது ஆவிக்குரிய ஆசிர்வாதமாய் காணப்படுகிறது. ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். இப்படி உன்னதத்துக்குரிய அநேக ஆசீர்வாதங்களை கர்த்தர் நமக்கு வைத்திருக்கிறார். உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களை மாத்திரம் எதிர் நோக்காமல் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள ஒவ்வொருநாளும் வாஞ்சியுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *