நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குத் தருவார்.

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும் படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்,     அவைகள் தீமைக்கல்ல,     சமாதானத்துக்கேதுவான நினைவுகளே (எரேமியா 29:11).

ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்க கிருபை செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். கர்த்தர் நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குத் தருவார். எந்தவொரு காரியத்திலும் முடிவை அறிந்துகொள்ளுவதற்குச் சிலகாலம் செல்லும். விவசாயி தன் நிலத்தில் விதைகளை விதைத்து,     நீர்பாய்ச்சி,     உரங்கள் போட்டு,     பாதுகாத்து நல்ல அறுவடை நாளுக்காக நம்பிக்கையோடு காத்திருப்பார். மாணவர்களும் கூட ஒரு வருடம் முழுவதும் நன்கு படித்து கடைசித் தேர்வை எழுதி நல்ல மதிப்பெண்களுக்காக எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். உலகக் காரியங்களிலும்,     ஊழியத்தின் பாதைகளிலும் இவை பொருந்தும். உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு,     அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய் என்று வேதம் கூறுகிறது. கண்ணீரோடு விதை விதைக்கிறவன்தான் கெம்பீரத்தோடு அறுவடைச் செய்வான். நீங்கள் எதிர்பார்க்கிற முடிவை நான் உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் வாக்களிக்கிறார். நீங்கள் நிருணயம் பண்ணுகிற காரியங்களைக் கர்த்தர் உங்களுக்காக நிலை வரப்படுத்துவார். உங்கள்  மனவாஞ்சைகளை நிறைவேற்றி உங்களை மகிழப்பண்ணுவார்.

கர்த்தர் உங்கள் பேரில் நினைவாயிருக்கிறவர். அனேக வேளைகளில் அவர் நம்மேல் கொண்டிருக்கிற நினைவுகளை நாம் அறியமுடியாது. யூதா ஜனங்களும் கூட,     பாபிலோனியச் சிறையிருப்பில் காணப்பட்ட வேளையில் கர்த்தர் தங்களை மறந்துவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் கர்த்தர் நான் உங்கள் மேல் நினைவாயிருக்கிறேன்,     நீங்கள் வீடுகளைக் கட்டி,     குடியிருந்து,     தோட்டங்களை நாட்டி,     அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். நீங்கள் பெண்களை விவாகம் பண்ணி,     குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று,     உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு,     உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக்கொடுங்கள், இவர்களும்,     குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும், நீங்கள் அங்கே குறுகாமல் பெருகுங்கள் என்றார்.  பாபிலோனிலே  எழுபதுவருஷம் நிறைவேறியபின்பு நான் உங்களைச் சந்தித்து,     உங்களை எருசலேமிற்கு திரும்பிவரப்பண்ணும் படிக்கு உங்கள் மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று வாக்கு கொடுத்தார்,     அப்படியே நிறைவேற்றினார். கர்த்தருடைய பிள்ளைகளே,     ஸ்திரீயானவள் கூட தன் கர்ப்பத்தின் பாலகனை மறக்கலாம்,     ஆனால் இயேசு உங்களை ஒருநாளும் மறப்பதில்லை.  அவருடைய உள்ளங்கையில் உங்கள் ஒவ்வொருவரையும் ஆணிகளினால் வரைந்து வைத்திருக்கிறவர்,     உங்கள் தலைமயிரைக் கூட எண்ணி வைத்திருக்கிறவர். நீங்கள் அவரால் மறக்கப்படுவதில்லை.

உங்களைக் குறித்து கர்த்தர் கொண்டிருக்கிற நினைவுகள் ஒவ்வொன்றும் தீமைக்கல்ல,     சமாதானத்திற்கேதுவானவைகள். ஆண்டவர்,      என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல,     உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்றும்,      பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ,     அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும்,     உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது என்றார். நம்மைக் குறித்து நாம் கொண்டிருக்கிற நினைவுகளைப் பார்க்கிலும்,     அவர் நம்மைக் குறித்துக் கொண்டிருக்கிற நினைவுகள் மேலானது.  அவைகள் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும்,     நம்பிக்கையையும் கொடுக்கும். கர்த்தர் உங்கள் மனவிருப்பத்தையும்,      வேண்டுதல்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றி,     இந்த புதிய மாதத்தில் உங்களை ஆசீர்வதித்து கனம் பண்ணுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *