செல்லப்பிள்ளை:-

நீதி 8:30. நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.

பொதுவாக நம்முடைய ஊர்களில் கடைசிப்பிள்ளையை செல்லப்பிள்ளை என்று கூறுவார்கள். ஆனால் கர்த்தருடைய பார்வையில் நாமெல்லோரும் செல்லப்பிள்ளைகள். ஒரு தகப்பன் திருமணமான தன் மகளை பார்த்து சொன்னார், உனக்கு எத்தனை வயது ஆனாலும் நீ என் செல்லப்பிள்ளை தான் என்று. இயேசு தன் சீஷர்களை சிறுபிள்ளைகளே என்று அழைத்தார். சற்று யோசித்துப்பாருங்கள் சீஷர்கள் சிறுவர்களாகவா இருந்தார்கள். எல்லாரும் நன்மை தீமை அறிந்த வயதில் இருந்தார்கள். அதுபோல தான் நமக்கு எத்தனை வயதானாலும் நாம் அனைவரும் நம் ஆண்டவருக்கு செல்லப்பிள்ளைகள்.

இந்த வசனத்தில் செல்லப்பிள்ளைகள் நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாய் இருந்தார்கள் என்று வாசிக்கிறோம். கடந்த நாட்களில் செய்தி தாளில் ஒரு சம்பவத்தை வாசித்திருப்பீர்கள். ஒரு இளைஞன் மற்ற பெண்ணுடன் வைத்த தகாத உறவை, தன் தகப்பன் தட்டி கேட்டவுடன், அந்த இளைஞன் தன் தகப்பனை தாக்கி, அவரை கட்டி போட்டு சாகும் படி அடித்தார் என்று. மற்றொரு குடும்பத்தில், அதிக செல்லம் கொடுத்து வளர்த்த ஒருவன், பின்னாட்களில் போதைக்கு அடிமையாகி எல்லாரையும் தாக்கவும், தன் குடும்பத்திற்கு இழிவை கொண்டு வரும்படியாக இருந்தான். இப்படிப்பட்ட பிள்ளைகளின் மூலம் எந்த ஒரு தகப்பன்மார்களும் மனமகிழ்ச்சி அடையமாட்டார்கள். அதுபோல தான் நம்மை செல்லப்பிள்ளையாக பார்க்கிற இயேசுவின் உள்ளம் மகிழ வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் எப்பொழுதும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருந்து, கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தில் நாம் வளர வேண்டும். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் (நீதி 8:13). அப்படி தீமையை வெறுத்து நாம் வாழும்போது செல்லப்பிள்ளைகளாகிய நம் மீது கர்த்தர் மனமகிழ்ச்சியாய் இருப்பார்.

மாத்திரமல்ல, நாம் உயர்த்திருக்கும்போது நம்மை கண்டு அவர் மகிழுவார். பள்ளிக்கூடத்தில் பிள்ளை படிப்பில் முதல் மாணவனாக திகழும்போதும், விளையாட்டுப்போட்டியில் முதலாக வரும்போதும், வேலைசெய்து உயர்ந்திருக்கும்போதும் எந்த தகப்பனின் உள்ளமும் மகிழும். அதுபோல தான் கர்த்தரின் செல்லப்பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றிலும் கெட்டிக்காரர்களாக இருக்கும்போது அவர் மகிழுவார்.

ஒரு பிள்ளை நல்ல நிலைக்கு வரும்படி எல்லா தகப்பனும் அயராது உழைத்து பிள்ளைகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவார்கள். அதுபோல தான் இயேசுவும், உங்களை உயர்த்தி, உங்களை மேன்மைப்படுத்தி, அவர் மகிழுவார். உங்களை கன்மலையின் மேல் நிறுத்தி அழகுபார்ப்பார். தாவீது, யோசேப்பு, தானியேல் போன்றோர்களை விசேஷித்த ஆவியினால் நிறைத்து மேன்மைப்படுத்தினார். அதுபோல உங்களையும் மேன்மைப்படுத்துவார். காரணம் நீங்கள் அனைவரும் இயேசுவின் செல்லப்ப்பிள்ளைகள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *