கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் (சங். 34:1).
For audio podcast of this Manna Today, please click the link,
சவுல் ராஜா தாவீதின் உயிரை வேட்டையாட அவனை தொடர்ந்து துரத்திக் கொண்டு காணப்பட்டான். தாவீது சவுலுக்குத் தப்பியோடி காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். ஆகீசின் ஊழியக்காரர்கள் உடனே அவன் யார் என்பதைப் புரிந்துகொண்டு, தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல்பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். தாவீது ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு ஒரு பயித்தியக்காரனைப் போன தன்னுடைய முகநாடியை வேறுபடுத்தி, வாசற்கதவுகளைக் கீறிக்கொண்டு, தன்வாயின் நுரையை தன் தாடியில் விழுப்பண்ணிக் கொண்டிருந்தான். இவனைப் பயித்தியக்காரன் என்று கருதி ஆகீசு துரத்திவிட்டான். அவனுடைய இன்னொரு பட்டத்துப்பெயர்தான் அபிமெலேக்கு என்பதாகும். தாவீது அங்கிருந்து தப்பி அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான். அங்கே அவனோடு ஏறக்குறைய நானூறு பேர் சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்கு முன்பாக தாவீது சங்கீதத்தைப் பாடும்போது, கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன், அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்றான். அவனுடைய எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை உயர்த்தும் துதி அவன் இருதயத்திலிருந்தபடியால், அது வாயில் வெளிப்பட்டது. ஆகையால் கர்த்தர் அவனை எல்லா இக்கட்டுகளிலிருந்தும் விடுவித்து, மேன்மையாய் உயர்த்தி, ஆசீர்வதித்தார். அவனை தன் இருதயத்திற்கு ஏற்றவனாகக் கண்டார். அவனுடைய சங்கீதங்களில் அனேக சங்கீதங்கள் துதியின் சங்கீதங்களாய் காணப்படுகிறது. அதுபோல, மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது என்றும், சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக என்றும் பாடினான். தன்னைப் போல மற்றவர்களும் கர்த்தரைத் துதிக்கவேண்டும் என்று வாஞ்சித்தான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரை ஸ்தோத்தரித்து துதியுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள், அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறது. எரிகோ கோட்டை கூட கர்த்தருடைய ஜனங்கள் ஆர்ப்பரித்து துதித்த வேளையில் இடிந்து விழுந்தது. பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் கர்த்தரைத் துதித்துப் பாடி, ஜெபம் பண்ணின வேளையில் கட்டுகள் அவிழ்ந்தது. நீங்கள் கர்த்தரை ஸ்தோத்தரித்து, துதிக்கும் போது உங்கள் வாழ்க்கையில் காணப்படுகிற தடைகள் விலகும், அற்புதங்கள் நடக்கும். யோசபாத்தின் நாட்களில் அவனுக்கு விரோதமாக அம்மோன் புத்திரரும், அம்மோனியரும், சேயீர் மலைதேசத்தாரும் யுத்தத்திற்கு வந்த வேளையில், பரிசுத்தமுள்ள மகத்துவ தேவனை துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள் என்று 2நாளா. 20:21, 22ல் எழுதப்பட்டிருக்கிறது. உங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களுக்காக நீங்கள் கர்த்தரை ஸ்தோத்தரிக்கும் போது, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். நீங்கள் கர்த்தரைத் துதிக்கும் துதியில் மிகுந்த வல்லமைக் காணப்படுகிறது. ஆகையால் கர்த்தரை எக்காலத்திலும், எப்பொழுதும் சங்கீதக்காரனைப் போலத் துதியுங்கள். அப்போது கர்த்தர் உங்களையும் மேன்மைப் படுத்தி ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar

