எதைச் செய்தாலும் மனப்பூர்வமாய் செய்யுங்கள்.

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே,    சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,    எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்யுங்கள் (கொலோ. 3:23,   24).

For audio podcast of this Manna Today, please click the link,

ஒரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்கக் கிருபை பாராட்டின கர்த்தருக்குத் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக. மே மாதத்தின் முதல் நாளை தொழிலாளர் தினமாக உலகம் முழுவதிலும் நினைவு கூருகிறார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற வீடுகள்,    உண்ணுகிற உணவு வகைகள்,     பிரயாணம் பண்ணுகிற வாகனங்கள்,    மற்றும் அனைத்துக் காரியங்களுக்குப் பின்னால் வியர்வை சிந்தி உழைக்கிற ஜனங்கள் காணப்படுகிறார்கள். நாம் அனேக வேளைகளில் அதை மறந்துபோய் விடுகிறோம்,    ஆனால் அப்படிப்பட்டவர்களைக் கர்த்தர் ஒருநாளும் மறப்பதில்லை. உலகப்பிரகாரமான வேலைசெய்கிற ஊழியக்காரர்களானாலும்,    கர்த்தருடைய பணியைச் செய்கிற ஊழியக்காரர்களானாலும் சரி ஒருவரையும்  அவர் மறவாமல் அவர்களுக்குரிய பலன்களைக் கொடுப்பார். கர்த்தராகிய தேவன் மனுஷனை சிருஷ்டித்து,    அவனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டு வந்து அதைப் பண்படுத்தவும்,    பாதுகாக்கவும் வைத்தார் என்று ஆதி. 2:15ல் எழுதப்பட்டிருக்கிறது. வேலை செய்வது என்பது மனிதனுக்குச் சிருஷ்டிப்பு முதல் கர்த்தர் வைத்த நியமமாகக் காணப்படுகிறது. வேலைசெய்ய மனதில்லாதவன் சாப்பிடவும் கூடாது என்று பவுல் தெசலோனிக்கேய சபை விசுவாசிகளுக்குக் கட்டளையிட்டான். ஆகையால் உலக வேலைகளானாலும்,    ஊழியத்தின் காரியங்களானாலும் சிறிதானதோ,    பெரிதானதோ எந்தப் பணியைச் செய்தாலும்  கர்த்தருக்குப் பயந்து முழு உள்ளத்தோடும் முழு மனதோடும் செய்யுங்கள். அப்போது உங்களுடைய சுதந்திரமான பலனைக் கர்த்தரிடத்திலிருந்து பெறுவீர்கள்.

இந்நாட்களில் பாசாங்கு செய்வது (pretense) எங்கும் காணப்படுகிறது. உலக வேலைகளிலும்,    ஊழியங்களிலும் அது காணப்படுகிறது. அனேக தொழில்கள் முடங்குவதற்கு அங்கு வேலைப்பார்ப்பவர்களே காரணமாகி விடுகின்றனர். ஏமாற்றுவதினாலும்,    திருடுவதினாலும் வணிகங்கள் மூடப்படுகிற நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அதிகாரிகளும் ஒரு தொழிலிலிருந்துகொண்டு,    அங்குக் காணப்படுகிற வசதிகளைப் பயன்படுத்தி,    தங்களுக்கென்று தனியாக பிசினஸ்  செய்வதினால், நாளடைவில் அவர்கள் வேலைப்பார்த்துக் கொண்டிருக்கிற தொழில் மூடும் நிலைக்குத் தள்ளிவிடுகிறார்கள். உண்மையும் உத்தமும் எங்கும் குறைந்து காணப்படுகிறது. உலக வேலைகள் தான் அப்படியென்றால் கர்த்தருடைய ஊழியத்திலும் கூட உண்மையையும்  உக்கிராணத்துவத்தையும் பார்க்க முடியவில்லை. ஊழியர்களிடையே காணப்படுகிற நம்பகத்தன்மை குறைந்து போகிறது. ஒவ்வொருவரும் தனிக்காட்டு ராஜாவாகக் காணப்பட விரும்புகிறார்களே ஒழிய இணைந்து தேவப் பணியைச் செய்வது என்பது அனேகருக்குக் கடினமாகக் காணப்படுகிறது. மோசேக்கு ஒரு யோசுவா காணப்பட்டது போல,    எலியாவிற்கு ஒரு எலிசா காணப்பட்டது போல,    பவுலுக்கு ஒரு தீமோத்தேயு காணப்பட்டது போல ஊழியத்திற்கு உதவியாய் தோள்கொடுக்கிறவர்களின்  எண்ணிக்கை குறைந்து விட்டது. ஊரும் ஆரோனும் போல கரங்களைத் தாங்குகிறவர்களை இந்நாட்களில் காண்பது அரிது. வாலிபர்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்,    அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் சபைகளில் காணப்படுகிற வாலிபர்களுக்குள்ளாகவும் சோர்வுகளும் பின் மாற்றங்களும் காணப்படுகிறது. முன்பு அவர்கள் வாழ்க்கையில் காணப்பட்ட கர்த்தருக்காகச் செயல்பட வேண்டும் என்ற வேகம்,    இந்நாட்களில் குறைந்து போய்விட்டது. கர்த்தருடைய பிள்ளைகளே,    நாம் எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்ய  நம்மை மறுபடியும் பிரதிஷ்டை செய்வோம். அப்போது உங்கள் அன்பின் பிரயாசங்களைக் கர்த்தர் மறந்து போகாமல்,    அதற்குரிய பலன்களை இம்மையிலும் மறுமையிலும்; தந்து உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *