தேவையான ஒன்று.

தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். லூக்கா 10:42.

நம்முடைய வாழ்க்கையில் எந்த காரியத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதை அறிந்தவர்களாக காணப்படவேண்டும். மரியாள் தேவையான ஒன்றை தெரிந்தெடுத்ததினால் இயேசுவினிடத்திலிருந்து தன்னை விட்டு எடுபடாத, நீங்காத நல்ல பங்கை பெற்றுக்கொண்டாள்.

இயேசு தன்னுடைய ஊழியத்தின் நாட்களில், எருசலேமுக்கு வரும்போது, அங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கும் பெத்தானியா என்ற கிராமத்திற்கு அவ்வப்போது போவதை வழக்கமாக கொண்டிருந்தார். காரணம் இயேசுவை நேசித்த, இயேசுவால் நேசிக்கப்பட்ட ஒரு குடும்பம் அங்கே காணப்பட்டது. அந்த குடும்பத்தில் மார்த்தாள், மரியாள், லாசரு என்று மூன்றுபேர் காணப்பட்டார்கள். லூக்கா 10:38-ல்  மார்த்தாள் இயேசுவை தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள் என்று எழுதப்பட்டிருக்கிறது.  நாம் இயேசுவிடத்தில் அன்பு செலுத்தி, அவரை ஏற்றுகொள்ளும் போது, அவரை வருந்தி  அழைக்கும் போது, நம்மிடம் வந்து நம்மோடு வாசம் பண்ணுகிறவர். நம் குடும்பத்தில் வந்து வாசம் பண்ணுகிறவர்.

இயேசுவை ஏற்றுக்கொண்ட மார்த்தாள் பற்பல வேலைகளை தனியே செய்ததினால் வருத்தமடைந்தாள். அதனிமித்தம் முறுமுறுத்தாள். உமக்கு என்னைக்குறித்து கவலையில்லையா என்று கேள்வி கேட்கவும் செய்தாள்.  அவளுடைய சகோதரி மரியாள் ஆண்டவருடைய பாதத்தில் அமர்ந்து, ஆண்டவர் உபதேசிக்க அவருடைய வசனத்தை கேட்டுகொண்டிருந்தாள். அவருடைய வார்த்தைகளை கேட்பதையே தெரிந்துகொண்டவளாக காணப்பட்டாள். மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்று மரியாளை ஆண்டவர் முன்னிலைப்படுத்துகிறதைப் பார்க்கமுடிகிறது.

நாமும் இந்நாட்களில் இசுவுக்காக, ஊழியத்திற்காக அனேக பிரயாசங்களை எடுக்கிறோம். நல்லது தான். ஆனால் அதனிமித்தம் ஆண்டவரோடு செலவிடுகிற நேரத்தை குறைத்து விடலாகாது. கர்த்தருடைய சமூகத்தில் அமர்ந்திருக்கிற நேரத்தை குறைத்துவிடக்கூடாது. வசன தியான நேரத்தை குறைத்துவிடக் கூடாது.  அவரோடு நாம் நேரத்தை செலவிட வேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். அவரோடு உறவாடும்படி விரும்புகிறார்.

இயேசுவின் பாதத்தண்டை அமருவது ஆவிக்குரிய மூன்று காரியங்களை குறிக்கிறது. சீஷத்துவத்தை, தாழ்மையை, கீழ்ப்படிதலைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட காரியத்தை செய்த மரியாள், தன்னை விட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்தெடுத்தாள். நித்திய ஜீவன் என்பது தேவன் அருளுகிற மிகவும் நல்ல பங்கு. அதற்குரியவைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாக காணப்படவேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார். பூமிக்குரியவைகளுக்கு அல்ல உன்னதங்களுக்குரியவைககளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவர்களாய் காணப்படவேண்டும், அதுவே ஆண்டவருக்கு பிரியமானது.

நீங்களும் காத்தருடைய பாதத்தில் அமர்ந்து உங்களைவிட்டு எடுபடாத நல்ல பங்கை பெற்றுகொள்ள, கர்த்தர்  உங்களுக்கு கிருபைசெய்யட்டும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *