வேதமே வெளிச்சம்.

சங்கீதம் 119 : 105 உம்முடைய வசனம் என் கால்களுக்கு தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.

எவர்ரெடி என்ற டார்ச் கம்பெனி விளம்பரத்தில் ஒரு இருட்டறையில் டார்ச் லைட்டை ஆன் செய்யும் போது, அங்கே ஒரு நாக பாம்பு காணப்பட்டது. ஒரு வேளை அந்த லைட் இல்லை என்றால் அந்த பாம்பு கடித்திருக்கும். இப்படித்தான் நம்முடைய வாழ்வில் சத்துரு வைக்கும் கண்ணிகள் நம்முடைய கண்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. ஆனால், அனுதினமும் நாம் வேதத்தை வாசிக்கும் போது, அந்த வசனம் நம்முடைய கால்களுக்கு தீபமாய்  இருப்பதால், நாம் எளிதாக சந்துருவின் கண்ணிகளை மேற்கொண்டு விடலாம்.

சர். வால்டர் ஸ்காட் என்பவர் இங்கிலாந்து தேசத்தில் புகழ் பெற்ற எழுத்தாளர். அவர் நோய் வாய்ப்பட்டு மரணிக்கும் தருவாயில், தன்னுடைய மகனிடம் சொன்னாராம், மகனே அந்த அலமாரியில் இருக்கும் புத்தகத்தை எடுத்து கொண்டு வா என்று. மகன் கேட்டானாம், அப்பா அந்த அலமாரியில் அநேக புத்தகம் இருக்கிறதே, எந்த புத்தகத்தை எடுத்து கொண்டு வரும்படி சொல்லுகிறீர்கள் என்று. தகப்பன் சொன்னாராம், மகனே புத்தகம் என்று அழைக்கபடுவதற்கு  தகுதியான ஒரே புத்தகம் அது வேதாகமம் தான் என்று. வேதாகமத்தில் யோவான் 14:1,2 வசனத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தாராம்.

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவமாயிருங்கள்; என்னிடத்தில் விசுவமாயிருங்கள்; என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படி இல்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ண போகிறேன் என்று வாசித்த இந்த வசனம் அவரை தேற்றியது.

அமெரிக்கா ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் சொன்னார் உலகத்தில் நம்மை எதிர் நோக்கி இருக்கிற எல்லாப் பிரச்னைகளுக்குமான தீர்வு பரிசுத்த வேதாகமத்தின் இரண்டு அட்டைகளுக்கும் நடுவே உண்டு. அது அருமையாய் நமக்கு ஆலோசனை சொல்லுகிறது என்பதாக.

அது மாத்திரமல்ல, ஒரு முறை இன்னொரு அமெரிக்கா ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் சொன்னார் “பரிசுத்த வேதகமமும் தேவனும் இல்லாமல் தேசத்தைச் சரியான முறையில் ஆட்சி செய்ய இயலாது” என்பதாக.

வேதத்தை நேசியுங்கள், தினந்தோறும் வாசியுங்கள்; அது உங்கள் கால்களுக்கு தீபமாயிருக்கும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.

Robert Jegadish
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *