சர்ப்பங்களை மிதிப்பீர்கள்:-

லூக்கா 10:19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

கர்த்தர் உங்கள் ஒவ்வொருவருக்கும் சர்ப்பங்களை மிதிக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார். சர்ப்பம் என்பது ஏதோ திமிங்கலம், கரடி போன்ற ஒரு உயிரினத்தை குறிப்பிடவில்லை. வெளி 12:9ல்  வாசிக்கிறோம் உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது என்று. வலுசர்ப்பம் என்பது சாத்தானை குறிக்கிறது. அந்த சாத்தானை மிதிக்கும் அதிகாரத்தை கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார்.

கர்த்தருடைய ஜனங்கள் இந்த கடைசி காலத்தில் வலுசர்ப்பதை எதிர்த்து ஜெயங்கொள்ளுகிற நாட்களில் இருக்கிறோம். உலகமெங்கம் தேவ ஜனத்திற்கு விரோதமோக, சபைக்கு விரோதமாக, சபையில் ஒற்றுமையை குலைக்கும்படி, சபையை அழிக்கும்படி, சபையில் கள்ள போதனைகள் பெருகும்படி, சபையில் அரசியல் செய்யும்படி, இன்று சத்துரு அநேக குள்ள நரிகளையும், ஆகான்களையும், பார்வோன்களையும், அம்மோனியர்களையும், மீதியானியர்களையும் ஏவிவிட்டு தீவிரமாக அவன் செயல்படுவதை பார்க்க முடிகிறது. மேற்கத்திய நாடுகளில் அநேக சபைகள் விக்கிரகமாகவும், மதுபான கடையாகவும் மாறிக்கொண்டு வருகிறது. கிருஸ்தவர்கள் இல்லாத நாடு என்று அநேக அரசியல்வாதிகளையும், மத குருமார்கர்களையும், தலைவர்களையும் சத்துரு ஏவிவிடுகிறதை பார்க்கமுடிகிறது. ஆனால் இன்றைய பரிதாபம் என்னவென்றால், இப்படிப்பட்ட சர்ப்பத்தின் ஆவியை மிதிப்பதற்கு பதிலாக கிருஸ்துவர்களாகிய நாம் அநேக காற்றுகளால் அடிக்கப்பட்டு, அங்கும் இங்குமாக திரிந்துகொண்டு முடங்கிபோகிறவர்களாக காணப்படுகிறோம்.

சர்ப்பம் எப்படி ஏவாளை வஞ்சித்து ஆண்டவரை விட்டு தூரம்போகும்படி செய்ததோ, அதேமாதிரி இன்றும் அநேக விசுவாசிகளை வஞ்சிக்கும்படியாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாற்கு 16:18ல் வாசிக்கிறோம் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள் அவர்களை சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். வஞ்சிக்கப்பட்டு போய்விடாதபடிக்கு விசுவாசத்தோடு சர்பத்தை மேற்கொள்ளுங்கள்.

நமக்கு ஒரு யுத்தம் உண்டு என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். அது மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு ( எபேசியர் 6:12 ). உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் சபைக்கும், உங்கள் பட்டணத்திற்கும், உங்கள் தேசத்திற்கும் விரோதமாக செயல்பட நினைக்கிற பொல்லாத சர்ப்பத்தை ( சந்துருவை ) இயேசுவின் ரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக, இயேசுவின் நாமத்தில் அவனை எதிர்கொள்ளுங்கள். வசனம் சொல்லுகிறது பிசாசுக்கு எதிர்த்துநில்லுங்கள்; அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். நீங்கள் பிசாசை பார்த்து ஓடி ஒழிபவர்களாக அல்ல, அவனை எதிர்கொண்டு ஜெயிக்க பிறந்தவர்கள். சர்ப்பத்தை மிதித்து, ஜெயத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்களோடுகூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *