இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன் (I would add to you as much more)

உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா  வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன், இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன் (2 சாமு. 12:8).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Gp9DRIrPnbc

தேவனுடைய பிள்ளைகள் ஆசீர்வாதமாகவும், எல்லா நன்மைகளை பெற்றும் வாழவேண்டும் என்பது கர்த்தருடைய விருப்பம். அவர், அவருடைய பிள்ளைகளுக்கு என்று உச்சிதமான நன்மைகளை வைத்திருக்கிறார். தம்முடைய சொந்தக் குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும்   தன் நேசக்குமாரனாகிய இயேசுவை ஒப்புக்கொடுத்தவர், அவரோடே கூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி என்று வேதம் கேட்கிறது. உத்தமமாய் நடக்கிறவர்களுக்குத் தேவன் நன்மையை வழங்காமல் இருப்பதில்லை. உங்களுக்கு எது வேண்டும் என்பது கர்த்தருக்கு தெரியும். அவருக்குச் சித்தமான நேரத்தில் எல்லாவித நன்மைகளையும் அவர் உங்களுக்கு நிச்சயமாகத் தந்து உங்களை ஆசீர்வதித்து மேன்மைப்படுத்துவார். 

ஆடுகளுக்கு பின்னால் காணப்பட்டவனும், தன் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டவனுமாகிய  தாவீதைக் கர்த்தர் ஆசீர்வதித்து சமஸ்த இஸ்ரவேலின் மேல் ராஜாவாக உயர்த்தினார். அவனும்  அதையெண்ணி நன்றி நிறைந்த இருதயத்தோடு ஆட்சி செய்து  வந்தான். ஒரு நாள் போர்முனையில் காணப்பட வேண்டியவன், பிசாசுக்கு இடம்கொடுத்து, அரண்மனையின் உப்பரிக்கையின் மேல் உலாவினான். அப்போது,  பச்சேபாளைக் கண்டு, இச்சித்து, அவளைத் தன்மனைவியாக்கிக்கொண்டான். அவளுடைய புருஷனையும் போர்முனையில் முன்னிறுத்திக் கொன்றுவிட்டான். இவ்வளவு பாவங்களைச் செய்த பின்பும் எல்லாவற்றையும் மறைத்து ஒன்றும் அறியாதவனைப் போல வாழ்ந்தான். அந்த வேளையில் கர்த்தர்  நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பி, அவனுடைய மதியீனத்தை  உணர்த்தி கூறின வார்த்தையாய் மேற்குறிப்பிட்ட வசனம் காணப்படுகிறது. ஒன்றும் இல்லாமையிலிருந்து உன்னை ஆசீர்வதித்து,   அனேக நன்மைகளையும், மனைவிகள் பிள்ளைகளையும் தந்தேன், இன்னும் உனக்கு ஏதாகிலும் வேண்டும் என்றால் அதையும் தருவேன். நான் செய்த நன்மைகளை மறந்து, நன்றியில்லாதபடி, ஏன் இந்த மதிகெட்ட காரியத்தைச் செய்தாய் என்று   கர்த்தர் அவனைக் கடிந்து கொள்ளுகிறதைப் பார்க்கமுடிகிறது.

கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் தாழ்வில் தேவன் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து,   இம்மட்டுமாய் உயர்த்தி வைத்திருக்கிறார். அதை அனுதினமும் நினைத்து நன்றி நிறைந்த இதயத்தோடு வாழுங்கள். இன்னும் உங்களுக்கு என்ன நன்மை வேண்டுமானாலும் அதை ஏற்றக் காலத்தில்  உங்களுக்குத் தருவார். அவர் சகலத்தையும் அதினதின்  காலத்திலே நேர்த்தியாகச் செய்கிறவர் என்று வேதம் கூறுகிறது. அப்படியிருந்தும்,   கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபட்டு தேவனுடைய நாமத்தைக்  கனவீனப்படுத்தாதிருங்கள். மற்றவர்களை ஏமாற்றுவது, கடன் வாங்கி திரும்பக் கெடாமலிருப்பது, பிறருடையவற்றை இச்சிப்பது,  அசுத்தமான காரியங்களைச் செய்வது, பண ஆசையினால் நிறைந்து வாழ்வது, பங்குச்சந்தைகளில் மூழ்கிக்கிடப்பது, கஞ்சத்தனம் பண்ணுவது, இப்படிப்பட்ட   காரியங்களைச் செய்வது தேவனுடைய இருதயத்தை வேதனைப்படுத்தும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அது அவரிடத்திலிருந்து உங்களுக்கு வருகிற ஆசீர்வாதங்களைத்  தடைசெய்து விடும் என்பதை மறந்து போகாதிருங்கள். ஆகையால் உங்களுக்கு வேண்டியதை இன்னும் தர வல்லமையுள்ள தேவனைச் சார்ந்து, பரிசுத்தமாய் வாழ உங்களை முழுமையுமாய் அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *