பார்க்கும் பார்வை (The sight of seeing)

ஆதியாகமம் 3:6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/D6P_H8Y9JR0

ஆதாமும் ஏவாளும் தேவனுடைய தோட்டத்திலிருந்து துரத்தப்படுவதற்கும் அவர்கள் விழுந்துபோனதற்கும் முக்கியமான காரணம் அவர்கள் பார்வை சரியாக இல்லை. பார்க்கும் பார்வையில் பலவீனத்தை கொண்டுவந்தால் மனிதன் விழுந்துவிடுவான் என்பதை அறிந்து சாத்தான், பார்க்ககூடாததை பார்க்கவைத்து மனுக்குலத்தை வஞ்சித்துவிட்டான். நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்று சொல்லி, நீ வந்து இந்தக்கனியை பார் என்று ஏவாளை வஞ்சித்தான். அவள் இந்த விருட்சம் பார்வைக்கு இன்பமாய் இருக்கிறது என்று கண்டாள். இந்த பார்வையில் தான் மனிதன் விழுந்தான். நம்முடைய வாழ்க்கையில் நாம் பார்க்கும் பார்வை மிகவும் முக்கியமானது.

லோத்தின் மனைவிக்கு ஏன் ஆண்டவர் கொடூரமான தீர்ப்பை அழிக்கவேண்டும்? ஆதி 19:17ல் உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே என்று தேவன் அவர்களை எச்சரித்தார். பார்க்காதே என்று தேவன் சொன்ன கட்டளையை மீறி லோத்தின் மனைவி பார்த்தாள்; அதன் விளைவாக அவள் உப்புத்தூணாக மாறிப்போனாள். மிகவும் கொடூரமான தீர்ப்பை கர்த்தர் அவள் பார்த்த பார்வையினிமித்தம் கொடுத்தார். ஆகையால் பார்த்தால் என்ன தவறு இருக்கிறது என்று சொல்லி, தகாதவைகளை, இச்சையை தூண்டுகிற படங்களை பார்க்காதிருங்கள். கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! என்று மத் 6:22,23 கூறுகிறது. மத் 18:9ல் உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய், எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும் என்றும் வேதம் எச்சரிக்கிறது. கண்களை இங்கும் அங்குமாக அலைபாயாவிட்டால், மிகவும் ஆபத்தை கொண்டுவரும்.

மாறாக தேவன் விரும்பும் வண்ணம் உங்கள் பார்வை இருக்கட்டும். கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும் என்று ஆதி 13 :14 -16ல் தேவன் கூறினார் . ஆபிரகாமே நான் உனக்கு கானானை தருவேன், நீ அதை பெற்றுக்கொள் என்று வெறுமனே சொல்லவில்லை. ஆண்டவர் ஆபிரகாமிடம் கண்களை ஏறெடுத்து பார்க்கச்சொன்னார். அவர் சொன்னதன்படி அவன் பார்த்தான், அவன் சந்ததி பூமியின் தூளை போல பெருகியது. அதுபோல தான் ஆண்டவர் ஆபிரகாமிடம் வானத்து நட்சத்திரங்களை பார்க்கச்சொன்னார், ஆபிரகாம் பார்த்தான், அதை விசுவாசித்தான், அவனுடைய விசுவாசத்தின்படி, அவன் சந்ததி வானத்து நட்சத்திரங்களை போல பெருகியது.

ஆகையால் உங்கள் பெருக்கத்தை கொண்டுவருவதும், சாபத்தை கொண்டுவருவதும் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. யோபு சொல்லுகிறான் என் கண்களோடு நான் உடன்படிக்கை பண்ணுகிறேன் என்பதாக. இன்றே உங்கள் கண்களோடு உடன்படிக்கை பண்ணுங்கள். தேவன் விரும்பும் வண்ணம், உங்கள் பார்வை இருக்கட்டும். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு பெருக்கத்தை கட்டளையிடுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *