நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும், அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார் (ஆதி. 4:7).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/fPWeExltWSo
வேதத்தில் முதல் முதலில் பாவம் என்ற வார்த்தையானது மேற்குறிப்பிட்ட வசனத்தில் எழுதப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு வார்த்தையை முதலில் எழுதப்பட்ட இடத்திலிருந்து அதின் அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியும். இந்த வசனத்திலிருந்து, பாவமானது, இரைக்காய் காத்திருக்கிற ஒரு சிங்கத்தைப் போல, யாரைத் தாக்கி விழத்தள்ளலாம் என்று வாசல்படியில் படுத்திருக்கும் என்பதை புரியமுடிகிறது. பாவத்தின் ஆசையானது ஜனங்களைப் பற்றியிருக்கும், அதாவது ஜனங்களை எப்படிப் பாவத்தில் விழத்தள்ளுவது என்பதே அதின் நோக்கமாயிருக்கும். பாவத்தை ஆண்டு அதை மேற்கொள்ளுவதற்கு, தேவனுடைய பார்வைக்கு எது உகந்ததாகவும், நன்மையானதாகவும் காணப்படுகிறதோ அதைச் செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்கிறவர்கள் தேவனால் அங்கீகரிக்கப்பட்டு மேன்மையடைவார்கள் என்பதாகவும் அந்த வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. காயீனுக்கு, தன் சகோதரனுடைய காணிக்கையைக் கர்த்தர் அங்கீகரித்ததையும், தன் காணிக்கையை அங்கீகரிக்கவில்லை என்பதையும் அறிந்த உடனே எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகநாடி வேறுபட்டது. உடனே கர்த்தர், அவன் தன் சகோதரனைக் கொலை செய்து பாவத்தில் அகப்படாதபடிக்கு எச்சரித்திருந்தும், அதையும் மீறி தன் சகோதரனைக் கொன்று பாவத்தைச் சம்பாதித்தான். அதின் விளைவாகக் கர்த்தர் அவனைச் சபித்தார், அவன் கைகளின் கிரியைகளை அழித்தார், அவன் பூமி எங்கும் நிலையற்று அலைகிறவனாய் காணப்பட்டான்.
தாவீது பத்சேபாளுடன் பாவம் செய்து, உண்மையும் உத்தமமுள்ள அவள் புருஷனான உரியாவையும் போர்முனையில் முன்னிறுத்தி, மற்ற இராணுவ வீரர்களை பின்வாங்கும் படிக்குச் செய்து, அவனைக் கொலை செய்து, அவன் மனைவியாகிய பத்சேபாளையும் தன் மனைவியாக்கிக் கொண்டான். இத்தனை தவறுகளைச் செய்தும் ஒன்றும் அறியாதவன் போலக் காணப்பட்டான். கர்த்தர் நாத்தான் தீர்க்கனை அனுப்பி அவன் தவறுகளை உணரச்செய்த பின்பு அவன் தன் மீறுதல்களுக்காக மனம் வருத்தினான். ஆகிலும் அவன் செய்த அந்த மகா பாவத்தின் தண்டனையை அவன் அனுபவித்தான். முதலாவது, பட்டயம் என்றென்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும் என்று கர்த்தர் கூறினார். வன்முறையும், இரத்தம் சிந்துதலும் அவன் வீட்டில் எப்பொழுதும் காணப்பட்டது. அடுத்ததாக, உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணுவேன் என்றும், உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து அடுத்தவனுக்குக் கொடுப்பேன் என்றும், நீ ஒளிப்பிடத்தில் குற்றத்தைச் செய்தாய், அவன் இந்தத் தவற்றைச் சூரியனுடைய வெளிச்சத்திலே செய்வான் என்றார். தாவீதின் குமாரனாகிய அப்சலோம் மூலம் இந்த இரண்டு காரியங்களும் அப்படியே நிறைவேறினது. அடுத்து, இந்தக் காரியத்தில் கர்த்தருடைய சத்துருக்கள் அவரை தூஷிக்க நீ காரணமாயிருந்தாய், அதாவது புறஜாதி ராஜாக்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வது இயல்பு, ஆனால் கர்த்தரை அறிந்த நீயும் இப்படிப்பட்டக் காரியங்களைச் செய்தது தவறு என்பதைக் கர்த்தர் சுட்டிக்காட்டினார். ஆகையால் உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய் சாகும் என்றும் கடிந்துகொண்டார். இதுவும் அப்படியே சம்பவித்தது.
கர்த்தருடைய பிள்ளைகளே, பாவத்தைக் கர்த்தர் மன்னித்தாலும், பாவத்தின் விளைவுகளை அதைச் செய்கிறவர்கள் சந்திக்க நேரிடும் என்பதை இந்தச் சம்பவங்கள் மூலம் அறியமுடிகிறது. அதிலும் குறிப்பாகக் கர்த்தரை அறிந்த ஜனங்கள் பாவப்பழக்க வழக்கங்களைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையாய் காணப்பட வேண்டும். பாவத்தைப் பலவீனமாய் பார்க்காமல், பாவமாய் பாருங்கள். தாவீதைப் போல, கர்த்தாவே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும் என்று நாமும் ஜெபிக்கிறவர்களாய் காணப்படுவோம்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

