1 கொரிந்தியர் 3:16,17 : நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/u5lD3NoPOUY
நம்முடைய தேவன் அன்புள்ளவர், பரிசுத்தமுள்ளவர், தாழ்மையுள்ளவர், குறை சொல்லமாட்டார், புறங்கூறமாட்டார், மன்னிக்கின்றவர், கோள் சொல்லமாட்டார், கேலி செய்யமாட்டார், பொறாமை கொள்ளமாட்டார், அவதூறு பேசமாட்டார், வாக்குவாதம் பண்ணமாட்டார், வீண்பேச்சு பேசமாட்டார், பிரிவிணை, குழப்பத்தை உண்டுபண்ணமாட்டார். இப்படி அவரைப்பற்றி அநேகம் சொல்லிக்கொண்டே போகலாம். இப்படிப்பட்ட தேவன் தங்குகின்ற ஆலயம்தான் நீங்கள்.
பவுல், கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற உங்களுக்குள் பிரிவினைகளும், பொறாமையும், வாக்குவாதமும் காணப்படுகின்றது, நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்கள் என்றும், நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் என்றும் அவர்களுக்கு எழுதினார்.
இன்று நீங்கள் எப்படிப்பட்டவர்களாகக் காணப்படுகின்றீர்கள் ? சற்று ஆராய்ந்து பாருங்கள்.
தேவனை அறியாத நாட்களில் இப்படிப்பட்ட பொல்லாத குணங்கள் காணப்பட்டிருக்கலாம். ஆனால், தேவனை நன்கு அறிந்து, ஞானஸ்நானம் பெற்று, அபிஷேகம் பெற்று இன்று விசுவாசிகளாய், ஊழியம் செய்கின்றவர்களாய்க் காணப்பட்ட பின்னரும் அதே குணங்களோடே வாழ்ந்தால். உங்கள் சரீரமாகிய ஆலயம் கறைபட்டதாய்க் காணப்படும், உங்களில் தேவன் வாசம்பண்ணமுடியாது.
எனவே இப்போதே உங்களைத் பரிசோதித்துப்பார்த்து, மீண்டும் உங்களைத் தாழ்த்தி, தேவனே என்னை முழுமையாய் அர்ப்பணிக்கின்றேன், எந்த சூழ்நிலையிலும் இப்படிப்பட்ட துர்குணங்கள் என்னில் காணக்கூடாதபடி உம்மைப்போலவே என்னையும் மாற்றிவிடும் என்று உண்மையாய்க் கேட்டால். அவர் அப்படியே செய்து, என்றென்றும் உங்களோடுக்கூட தங்கியிருப்பார். அப்போது சத்துரு வெட்கப்பட்டுப்போவான். பரலோகம் உங்கள் நிமித்தம் மிகவும் மகிழும். நம்முடைய சபைகளில், ஊழியங்களில், குடும்பங்களில் கர்த்தர் மகிமையானவைகளை நிச்சயமாய்ச் செய்வார்.
கர்த்தர்தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.
Sam David
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

