அதிசயமாய் பிறந்தவர் (Miraculously born)

மீகா 5:2. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PTGADdy5jjo

இயேசுவின் பிறப்பு மற்றவர்களுடைய பிறப்பை போன்றதல்ல; அவர் பிறந்தபோது தான் அவருடைய நாட்களின் ஆரம்பமும் அல்ல; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாய் இருந்தது. இயேசு சர்வத்திற்கும் முன்னிருந்தவர், அவர் சர்வத்தையும் உண்டாக்கியவர், சர்வத்தையும் தாங்கி நடத்துகிறவர், மனுஷன் பாவம் செய்தபோது வாக்குப்பண்ணப்பட்டவர், தீர்க்கதரிசன புஸ்தகத்தில் தீர்க்கதரிசிகளால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவர், காலம் நிறைவேறியபோது ஸ்திரீயினிடத்தில் பிறந்தவர், ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்த இம்மானுவேல், மாம்சத்தில் வந்த ஆண்டவர், மனுக்குலத்தை இரட்சிக்கும்படி மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராய் வந்தவர்.

பாலஸ்தீனா தேசத்தில் மூன்று பட்டணங்கள் விசேஷித்தவைகள். இயேசு பிறந்த பெத்லகேம், அவர் வளர்ந்த நாசரேத், தேவாலயம் இருந்த எருசலேம். பெத்லகேம் ஊரில் அவருக்கு இடமில்லை, நாசரேத் ஊர் இயேசுவை புறக்கணித்தது, எருசலேம் அவரை சிலுவையில் அறைந்தது. பெத்லகேமில் அவருக்கு இடமில்லாமல் போனாலும், சத்திரத்தில் அவருக்கு இடமில்லாமல் போனாலும், மாட்டுத்தொழுவதில் அவருக்கு இடம் கிடைத்ததே! யாக்கோபு பதான் அராமிலிருந்து எபிரோனுக்கு கடந்து செல்லுகையில் எருசலேமுக்கு அருகாமையில் ராகேல் பென்யமீனை பெற்று, அவள் அங்கே மரித்துப்போனாள். யாக்கோபும் மரித்து அவனுடைய சரீரத்தை அவள் அருகே வைத்தார்கள். பின்னாட்களில் ரூத் எருசலேமிற்கு வந்து போவாஸின் போர்வைக்குள்ளாக வந்தாள். அவள் ஒபேத்தையும், ஓபேத் ஈசாயையும், ஈசாய் தாவீதையும், தாவீதின் குமாரனாக இயேசு அங்கே பிறந்தார். அவருடைய பிறப்பு அநாதி நாட்களாய் திட்டம்பண்ணப்பட்டது.

ஒரு சிறிய ஊரில் இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜாவாக இயேசு பிறந்தார். இயேசு மாட்டு தொழுவத்தில் பிறந்தாலும், அவர் இஸ்ரவேலை ஆளப்போகும் ராஜாவாகவே பிறந்தார். இன்று உங்களை ஆளும்படியாக உங்கள் உள்ளத்தில் ராஜாவாக பிறக்க அவர் ஏக்கமுடையவராக இருக்கிறார். சுமார் 2025 ஆண்டுகளுக்கு முன்பாக இயேசு பிறக்க சத்திரத்தில் இடம் இல்லாமல் போனது போல இன்று அநேகருடைய உள்ளத்தில் அவர் ராஜாவாக பிறக்க அநேகர் அனுமதிக்காமல் போய்விட்டார்கள். நீங்கள் உங்கள் உள்ளத்தை அவருக்கு திறந்துகொடுப்பீர்களா ? இயேசு உங்கள் உள்ளத்தில் வந்து உங்களை ஆளுகிறவராக இருக்க விட்டுகொடுப்பீர்களா? இயேசு அநேகருடைய உள்ளத்தில் பிறக்க வேண்டுமென்று நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவீர்களா? அப்படி செய்வீர்களென்றால், நீங்கள் இயேசு பிறந்த நாளை சரியாக அனுசரிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் நாளாக இந்நாட்கள் உங்களுக்கு காணப்படட்டும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *