இயேசு யாருடைய குமாரன்? (Whose son is Jesus?)

லூக்கா 1:31,32 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bhtH9rqZCQc

இயேசு ஆபிரகாமின் குமாரனாய் இந்த உலகத்தில் பிறந்தார் என்றும் தாவீதின் குமாரனாய் பிறந்தார் என்றும் இயேசுவின் வம்ச வரலாறு கூறுகிறது (மத் 1:1). மத் 9:27ல், இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள் என்று எழுதப்பட்டபடி, இயேசு தாவீதின் குமாரன் என்று அழைக்கப்பட்டார். பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவனை இயேசு சொஸ்தப்படுத்தியபோது, தாவீதின் குமாரன் இவர் தானா என்று சொல்லி ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். மத் 1:23ல் அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் என்று எழுதப்பட்டபடி, இயேசு ஒரு கன்னிகையின் குமாரன் என்று அழைக்கப்பட்டார். ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசித்து கொண்டிருந்ததை ஆச்சரியத்தோடு பார்த்தவர்கள், இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? (மத் 13:55) என்று கூறினார்கள். பிலிப்பு இயேசுவை யோசேப்பின் குமாரன் என்று சொன்னான்.

இயேசுவை, மரியாளும் யோசேப்பும் தொலைத்தபோது, உன் தகப்பனும் நானும் உன்னை தேடினோமே என்று மரியாள் இயேசுவை பார்த்து கேட்டாள். அதற்கு இயேசு கொடுத்த பதில், நான் என்னுடைய பிதாவுக்கு அடுத்தவைகளை செய்யவேண்டும் என்று நீங்கள் அறியீர்களா என்று சொல்லி தன்னை அவர்களிடம் தேவனுடைய குமாரன் என்று சொன்னார்.

யோவான் ஸ்நானகனுடைய பிறப்பை குறித்து தேவதூதன் எலிசபெத்திடம் சொல்லவில்லை; மாறாக அவள் கணவனாகிய சகரியாவிடம் வந்து சொன்னான். இயேசுவின் பிறப்பை குறித்து தேவ தூதன் யோசேப்பிடம் வந்து சொல்லவில்லை, மாறாக, அவன் மனைவியாகும்படி நிச்சயிக்கப்பட்ட மரியாளிடம் வந்து சொன்னான். யோவான் ஸ்நானகன் பிறந்ததால், எலிசபெத் அல்ல; சகரியா ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி தேவனை மகிமைபடுத்தினான். இயேசு பிறந்தபோது யோசேப்பு நீதினமாயிருந்து அவரை ஏற்றுக்கொண்டாலும், மரியாள் என் ஆவி களிகூருகிறது என்று தேவனை மகிமைப்படுத்தினாள். சகரியா யோவான் ஸ்நானகனை குறித்து சொல்லுகிறான், நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய் என்பதாக. தேவதூதன் மரியாளிடம் சொன்னான், இயேசு உன்னதமானவருடைய குமாரன் என்று அழைக்கப்படுவார் என்பதாக.

ஆகையால் இயேசு ஆபிரகாமின் குமாரன், தாவீதின் குமாரன், கன்னிகையின் குமாரன், யோசேப்பின் குமாரன் என்று அழைக்கப்பட்டாலும், பிரதானமாக நாம் அவரை தேவகுமாரன் என்று அறிந்துகொள்ளவேண்டும். நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள் (மத் 27:54). சீமோன் பேதுரு சொல்லுகிறான் நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் (மத் 16:16,17) என்பதாக.

இந்நாட்களில் இயேசுவை மனிதனாக பிறந்த குழந்தை என்று அநேகர் பார்க்கிறார்கள். அவர் இப்பொழுது குழந்தை இயேசுவாகவும் இல்லை, மனிதனாகவும் இல்லை. அவர் தேவனுடைய குமாரனாக காணப்படுகிறார். இயேசுவை தேவனுடைய குமாரனாக பார்க்கும்படியாக பரலோகத்திலிருக்கிற பிதா ஒவ்வொருவருக்கும் வெளிப்படுத்துவாராக.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *