அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள் (லூக்கா 1:39,40).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_MkZlRDaSS0
ஆறு மாத இடைவெளியில்; கர்த்தருடைய வல்லமையால் இரண்டு பெண்கள் அற்புதமாகக் கர்ப்பவதியானார்கள். அவர்கள் எலிசபெத்தும் மரியாளுமாய் காணப்படுகிறார்கள். சாராள் ஆகாரைப் போலவும், லேயாள் ராகேலைப் போலவும், நகோமி ரூத்தைப் போலவும், தெபோராள் யாகேலைப் போலவும், எலிசபெத்தும் மரியாளும் வேதத்தில் முக்கியமான பாத்திரங்களாய் கருதப்படுகிறார்கள். இவர்களில் எலிசபெத் வயோதிப ஸ்தீரி, மரியாளோ இளம் கன்னிகை. ஆகாய், சகரியா என்ற இரண்டு தீர்க்கர்களில் ஆகாய் மிகவும் வயதான தீர்க்கதரிசி, சகரியா வாலிப வயதில் தீர்க்கதரிசனம் கூறினவன். இவர்கள் இருவருக்கும் சுமார் எழுபது வயது வித்தியாசம் காணப்படக்கூடும். ஆனால் இரண்டு பேரும் ஒரே காலகட்டத்தில் தீர்க்கதரிசனம் உரைத்து ஆலயம் கட்டினவர்களை உற்சாகப்படுத்தினார்கள். ஆண்டவருக்கு தன்னுடைய சித்தத்தை நிறைவேற்ற வயோதிபர்களும், வாலிபர்களும் வேண்டும்.
ஒருநாள் தேவதூதன் மரியாளை நோக்கி, கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். அவள் இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருக்கையில், தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள், மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம் என்றான். உடனே சுமார் நுறு மைல் தொலைவில் காணப்பட்ட எலிசபெத்தை சந்திக்குப்படிக்கு மரியாள் புறப்பட்டுச் சென்று, அவள் வீட்டில் பிரவேசித்து, அவளை வாழ்த்தினாள். இந்த வாழ்த்துதலின் சத்தத்தை எலிசபெத்து கேட்ட உடனே அவள் வயிற்றிலிருந்து பிள்ளை துள்ளிற்று, அவன்தான் பின்னாட்களில் இயேசுவின் ஊழியத்திற்கு வழியை ஆயத்தம் பண்ணின யோவானாய் காணப்படுகிறான். உடனே எலிசபெத்தும் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது, விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவை நிறைவேறும் என்றாள். மரியாளும் ஆவியில் களிகூர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தது அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆழமான நட்பில் வளரவும், கர்த்தருடைய காரியங்களில் தங்களை அர்ப்பணித்து வாழவும் உதவியாயிருந்தது.
கர்த்தருடைய பிள்ளைகளே, இந்தப் பண்டிகை நாட்களில் ஒருவரையொருவர் வாழ்த்துவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். நம்மைக் காட்டிலும் மற்றவர்கள் நன்கு காரியங்களைச் செய்யும் போதும், வாழ்ந்திருக்கும் போதும் அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்துங்கள். ஊழியத்தில் இளையவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் வளர்ச்சியில் மகிழுங்கள். அதுபோல வாலிபர்களும் முதிர்ந்த ஊழியர்களுக்கு துணையாக நின்று உடன் ஊழியம் செய்யுங்கள். ஒருவரையொருவர் தேற்றி, உற்சாகப்படுத்தி, வாழ்த்தி அவர்களைக் கர்த்தருக்குள் ஊன்றக் கட்டுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

