இம்மானுவேல் என்ற அடையாளம் (The sign of Immanuel) 

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார், இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசாயா 7:14).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/9iqpAO1mQJc

ஆகாஸ் என்பவன் யூதாவில் தோன்றின பன்னிரண்டாவது ராஜா. அவன் தன்னுடைய இருபதாவது வயதில் ராஜாவாகி, மிகவும் துன்மார்க்கமாய் ஆட்சி செய்தவன். அவன் தன்னுடைய குமாரனைக் கூட  தீக்கடக்கப்பண்ணி  பலியிட்டு கொன்றவன், மேடைகளிலும்  மலைகளின் மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும்  பாகால்களுக்கு பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான் என்று 2 இரா. 16:3,4ல் எழுதப்பட்டுள்ளது.  இந்த சூழ்நிலையில், சீரியாவின்  ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம் பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள். ஆகாசும் அவன் ஜனங்களும் மிகவும் பயந்து, காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறது போல அவர்கள் இருதயங்கள் அசைந்தது. அப்பொழுது கர்த்தர், அவன் துன்மார்க்கன் என்று அவனை கைவிடாதபடி, அவர் தாவீதுக்கு கொடுத்த வார்த்தையை நிறைவேற்றும் படிக்கு,  ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் நல்வார்த்தையை அனுப்பினார். நீ பயப்படாதே என்றும், ரேத்சீனும், பெக்காவும் முன்பு எரிந்து, இப்போது வெறுமனே புகைகிற இரண்டு கொள்ளிக்கட்டைகள் என்றும், அவர்கள் முற்றிலும் அணைந்து போவார்கள் என்றும், அவர்கள் திட்டம் வெற்றி பெறாது, அது நிறைவேறாது என்றும் கர்த்தர் வாக்குக்கொடுத்தார். இவையெல்லாம் உண்மை என்பதை நிரூபிக்க, ஆகாசிடம்  ஒரு அடையாளத்தை கேட்கும் படிக்குக் கர்த்தர் கூறினார், அது மிகவும் ஆழத்திலிருந்து வருகிற ஓர் அடையாளமானாலும் சரி, அல்லது வானம் போன்ற உயரமான இடங்களிலிருந்து வருகிற அடையாளமானாலும் சரி, எதை வேண்டும் என்றாலும் அடையாளமாய் கேட்கும் படிக்குக் கர்த்தர் கூறினார். ஆனால் ஆகாஸ், கர்த்தர் தன்னுடைய வார்த்தையை நிரூபிக்க, நான் அடையாளத்தைக் கேட்டு கர்த்தரை சோதிக்கமாட்டேன் என்றான். அப்பொழுது   ஆண்டவர் தாமே ஒரு அடையாளத்தை  அவர்களுக்குக்  கொடுத்தார். இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் என்பதாக.  இந்தத் தீர்க்கதரிசன வசனத்தின் நிறைவேறுதல், அருகிலும், தொலைவிலுமாக, இரண்டு வகைகளில் நிறைவேறினது. 

முதலாவது, அந்நாட்களில் அங்கே காணப்பட்ட ஒரு கன்னிகை, அதாவது எபிரேய மூலப் பதத்தில் இளம்பெண், கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு இம்மானுவேல் என்று பெயரிட வேண்டும். அவன் திட ஆகாரத்தை உட்கொள்ளத் துவங்கி, தீமையை வெறுத்து, நன்மை தீமையை அறிகிறதற்கு முன்னே, ஆகாசுடைய இரண்டு எதிரிகளாகிய ரேத்சீனும்,  பெக்காவும் அழிந்து போவார்கள். அது எழுத்தினபடியே நிறைவேறினது. இங்கே உன்னதமானவருடைய பலம் நிழலிட்டு, மரியாள் அற்புதமாக கர்ப்பம் தரித்ததைப் போலக் கர்ப்பம் தரிப்பதைக் குறித்து எழுதப்படவில்லை. கர்த்தர் தாவீதுக்கு கொடுத்த வார்த்தைக்கு ஏற்ப, அவனுடைய வம்சத்தில் அரியணையில் ஒருவன் காணப்படுவான் என்பதிற்கிணங்க,  இம்மானுவேலாய் யூதாவின்  ராஜாவாகிய ஆகாசோடு இருந்து, அவனுக்கு ஜெயத்தைக் கொடுப்பேன் என்பதைக் குறிக்கிறதாகக் காணப்படுகிறது.

இரண்டாவது, ஏசாயாவின் நாட்களிலிருந்து சுமார் எழுநூறு  வருடங்களுக்குப் பின்பு, மரியாள் என்ற புருஷனை அறியாத ஒரு கன்னிகை, அற்புதமாக இயேசு என்ற பாலகனை  பெத்லகேமிலே  பெற்றெடுப்பதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. தேவதூதன் அவளிடம் வந்து, பரிசுத்தஆவி உன்மேல் வரும், உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும், ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்  என்பதாகக் கூறினான் என்று லூக்கா 1:35 கூறுகிறது.  இயேசு,  இம்மானுவேலாய் என்றெய்க்கும்  நம்மோடிருக்கும் படிக்குச் சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகப் பிறந்தார். உலகத்தின் முடிவு பரியந்தம் நான்  உன்னோடிருப்பேன் என்று அவர் வாக்குக் கொடுத்திருப்பதினால் அவர் ஒருநாளும் உங்களை விட்டு விலகவும் மாட்டார், உங்களைக் கைவிடவும் மாட்டார். ஆகையால் இந்தப் பண்டிகைக் காலங்களில் மகிழ்ச்சியோடும் சந்தோஷத்தோடும் காணப்படுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *