உடன்படிக்கையின் தேவன் (God of the Covenant)

ஆதியாகமம் 17:2 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xgFJVvHWgGY

வாடகைக்கு வீடோ, அலுவலகமோ எடுக்கும்போது உரிமையாளருக்கும், அங்கே இருப்பவர்களுக்கும் நடுவாக Agreement அதாவது ஒப்பந்தம் போடப்படும். அந்த ஒப்பந்தத்தை யாரும் மீறக்கூடாது. நிறுவனங்களும் ஒப்பந்தக்காரர்களுக்கு Agreement போடுவார்கள். அதுபோல தேவன் அநேக இடங்களில் கர்த்தருடைய பிள்ளைகளோடு உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். முதலாவது, தேவன் நோவாவிடம் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்தினார். அவர்கள் பேழைக்குள் பிரவேசிக்கும்படியாகவும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும் என்றும் உடன்படிக்கை ஏற்படுத்தினார். அந்த உடன்படிக்கையை சுமார் 4000 ஆண்டுகள் ஆகியும் தேவன் அதை மீறவில்லை. அதேபோல தேவனுக்கும் ஆபிரகாமிற்கும் நடுவாக தேவன் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். ஆபிரகாமை அவர் திரளாய் பெருகப்பண்ணுவார் என்பதே அந்த உடன்படிக்கை. மாத்திரமல்ல, ஆபிரகாமிற்கு பின்பாக அவன் சந்ததிக்கும் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் என்று தேவன் வாக்கு கொடுத்தார். அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன் என்று தேவன் ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கிற்கும் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார் (ஆதி 17:21).
அவர் ஏற்படுத்தின அந்த உடன்படிக்கையின்படி, இந்நாட்கள் வரைக்கும் ஆபிரகாமின் சந்ததி திரளாய் பெருகிக்கொண்டே தான் காணப்படுகிறது.

ஆபிரகாமின் சந்ததியில் வந்த உங்கள் ஒவ்வொருவருக்கும், தேவன் ஆபிரகாமிற்கு ஏற்படுத்தின உடன்படிக்கை சொந்தம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கர்த்தர் உங்களோடு ஏற்படுத்தின உடன்படிக்கை என்னவென்றால், உங்களை திரளாய் பெருகப்பண்ணுவேன் என்பதாய் காணப்படுகிறது. உங்களை வானத்து நட்சத்திரங்களை போலவும், பூமியின் கடற்கரை மணலை போலவும் திரளாய் பெருகப்பண்ணுவார். போன வருஷத்தில் இருந்ததை காட்டிலும் இந்த வருஷத்தில் உங்களை திரளாய் பெருகப்பண்ணுவார். உங்கள் ஆவிக்குரிய, உலகத்துக்குரிய ஆசீர்வாதங்களில் பெருக்கத்தை கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் காண்பது நிச்சயம். காரணம் நம்முடைய தேவன் பெருக்கத்தின் தேவன் மாத்திரமல்ல, அவர் உடன்படிக்கையின் தேவன். உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன் என்று சங்கீதம் 89:34ல் கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார் என்றும் சங்கீதம் 25:14ல் கர்த்தர் கூறுகிறார். ஆகையால் இந்த வருடத்திலும் அவர் உங்களை திரளாய் பெருகப்பண்ணுவார் என்ற உடன்படிக்கையை மறந்துபோவதில்லை. நீங்கள் ஒவ்வொருவரும் திரளாய் பெருகுவீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *