சங் 1:3. அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/PA2GlUKMBPE
உங்களுக்கு 1000 கிலோ தங்கம் இலவசமாக ஒரு இடத்தில் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதே சந்தர்ப்பத்தில், கர்த்தருடைய வார்த்தையும் இலவசமாக கிடைக்கிறது என்றால் எதை நீங்கள் தெரிந்தெடுப்பீர்கள்? உலகம் ஒருவேளை சொல்லலாம் 1000 கிலோ தங்கத்தை நழுவ விடுகிறவன் பைத்தியக்காரன் என்பதாக. ஒரு வேளை கூழுக்காக தன்னுடைய முதற்பலனுக்கான ஆசீர்வாதத்தையெல்லாம் ஏசா இழந்துபோய்விட்டான் என்பது நாம் எல்லாரும் அறிந்த சத்தியம். வசனத்திற்கு ஒப்பாக இந்த உலகத்தின் ஆஸ்தி ஐசுவரியங்களெல்லாம் ஈடு இணையாகுமா? வசனங்கள் நமக்கு கிடைத்த எல்லா பொக்கிஷங்களிலும் மிகப்பெரிய பொக்கிஷம் என்ற உணர்வு இருந்தால், நாம் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்று அர்த்தம். காரணம் முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் ஐசுவரியத்தின் மயக்கத்தினால் இருப்பவன். அவனை பொறுத்தவரை வசனத்தை காட்டிலும் 1000 கிலோ தங்கம் தான் முக்கியம். ஆனால் ஆண்டவரோ, நானே மெய்யென திராட்சைச்செடி, நீங்கள் என்னில் நிலைத்திருங்கள் என்று கூறுகிறார். அவரில் நிலைத்திருப்பது என்பது அவருடைய வசனத்தில் நிலைத்திருப்பது.
ஒரு ஊழியக்காரர் சொன்னார் நாம் வேதத்தை வாசிக்கும்போது, வேதம் நம்மை வாசிக்கிறது என்பதாக. ஆதியிலே வார்த்தை இருந்தது (யோவா 1:1), தேவன் வார்த்தையை மகிமைப்படுத்தியிருக்கிறார் (சங் 138:2), வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், அவருடைய வார்த்தை ஒழிந்துபோகாது(மாற் 13:31), மரியாள் தேவையானது வார்த்தை என்பதை அறிந்துகொண்டாள். ஆகையால் அவருடைய வேதத்தில் இரவும் பகலும் தியானமாய் இருங்கள். உங்கள் நேரத்தை திருடுகிறவர்களுக்கு ஜாக்கிரதையாய் இருங்கள். ஈசாக்கை பாருங்கள்; அவன் தனக்கு பெண் தேடும் காலமாய் இருந்தாலும், தன்னுடைய தியான நேரத்தை அசட்டை செய்யவில்லை.
தேவனுடைய வேதத்தை நேசித்து, தியானிக்கும்போது, நீங்கள் செய்வதெல்லாம் வாய்க்கும். நீங்கள் முயற்சிக்கும் காரியங்கள் தோல்வியில் முடிவடைவதில்லை. குறித்த காலத்தில் உங்கள் காரியம் கைகூடி வரும். சங் 138:2 ல் சங்கீதக்காரன் சொல்லுகிறான், உமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர் என்பதாக. அதே சங்கீதம் கடைசி வசனம் கூறுகிறது, கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் என்பதாக. உங்கள் காரியங்கள் எல்லாம் ஜெயமாக வாய்க்க வேண்டுமென்றால், கர்த்தருடைய வேதத்தில் 24 /7 தியானமாய் இருங்கள். அப்பொழுது நீங்கள் செய்வது உங்களுக்கு வாய்க்கும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

