அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும் கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான் (யாத். 8:19).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/G_imkomep4Y
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்திலே 430 வருடம் அடிமைகளாய் காணப்பட்டார்கள். அவர்களை விடுவிக்கும் படிக்குக் கர்த்தர் குறித்த காலம் வந்தது. அதற்காகத் தேவன் மோசேயையும், ஆரோனையும் பார்வோனிடத்தில் அனுப்பினார். அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது. அவர்கள் பார்வோனிடம் சென்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறினபோது, அவன் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன், நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்று பெருமையோடு பதில் கூறினான். ஆகையால் பத்து அற்புதங்களினாலும், வாதைகளினாலும் பார்வோனையும் எகிப்தையும் வாதிக்கக் கர்த்தர் சித்தம் கொண்டார். முதலாவது, உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு, அது சர்ப்பமாகும் என்று கர்த்தர் கூறினார், ஆரோன் அவ்வண்ணமாகக் கோலை போட்ட வேளையில் அது சர்ப்பமாயிற்று. உடனே பார்வோன் தன் மந்திரவாதிகளை அழைத்தான், அவர்கள் தங்கள் கோல்களைப் போட அவைகளும் சர்ப்பமாயிற்று. அதனிமித்தம் பார்வோன், மோசே, ஆரோனிடம் உங்கள் தேவனைப் போல எங்கள் தெய்வங்களும் வல்லமையுள்ளது என்பதைச் சொல்லுகிறவனாகக் காணப்பட்டான். இரண்டாவது, கோலை ஓங்கி நதியில் அடிக்குப்படிக்குக் கர்த்தர் கூறினார், மோசேயும், ஆரோனும் கர்த்தருடைய வார்த்தையின் படிச் செய்த வேளையில் நதியின் தண்ணீர் இரத்தமாயிற்று. உடனே மீண்டும் பார்வோன் எகிப்தின் மந்திரவாதிகளை அழைக்க அவர்களும் அவ்வண்ணமாகச் செய்தார்கள். ஆகையால் பார்வோனுடைய இருதயம் கடினப்பண்டு, மேட்டிமைகொண்டு, கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடாமல் காணப்பட்டான்.
மூன்றாவதாக, கர்த்தர் எகிப்தின் எல்லைகள் எங்கிலும் தவளைகளைத் திரளாகப் பிறப்பித்து, அவர்களை வாதித்தார். ஆனால், எகிப்தின் மந்திரவாதிகளும் அவ்வண்ணமாகச் செய்து தேசத்தின் மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள். இவ்வண்ணமாக அவர்கள் தேவனுடைய வல்லமையை மட்டுப்படுத்தி தங்களுடைய தெய்வங்களும் வல்லமையுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறவர்களாகக் காணப்பட்டார்கள். நான்காவதாக, கர்த்தர் எகிப்தின் புழுதியெல்லாம் பேன்களாக மாற்றினார். அவைகள் எகிப்தின் மனிதர்களையும், மிருகங்களையும் வாதித்தது. எகிப்தின் மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அவ்வண்ணமாகச் செய்ய முயன்ற வேளையில் அவர்களால் கூடாமல்போயிற்று. அப்போது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி, இது தேவனுடைய விரல் என்று கூறி அவனை எச்சரித்தார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே, சத்துரு பலவான் தான், ஆனாலும் அவனுடைய வல்லமைக்கு ஓர் எல்லை காணப்படுகிறது. ஆனால் நாம் ஆராதிக்கிற தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அவருடைய வல்லமைக்கு எல்லையே இல்லை. தேவனுடைய விரல் என்பது அவருடைய நிகரற்ற, வேறுயாருடனும் ஒப்பிடக்கூடாத வல்லமையையும், அதிகாரத்தையும் குறிக்கிறது. அவருடைய நாமம் எல்ஷடாய் என்பதாகும். அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். இயேசு இப்பூமியில் ஊழியம் செய்த நாட்களில் தேவனுடைய விரலினால் பிசாசுகளைத் துரத்தி அனேகரை விடுதலையாக்கினார். அனேக வேளைகளில் தேவனுடைய வல்லமையை நாம் உணராமல் அவரை மட்டுப்படுத்துகிறவர்களாய் காணப்படுகிறோம். நம்முடைய அவ்விசுவாசம் ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் செய்ய நினைக்கிற அனேக அற்புதங்களைத் தடைசெய்கிறது. ஆகையால் தேவனுடைய அளவற்ற, நிகரற்ற, ஒப்பிடமுடியாத வல்லமையின் மேல் விசுவாசம் வைத்து, நீங்கள் எதிர்பார்க்கிறவற்றை அவரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

