யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? (Where is the one who has been born King of the Jews)

யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். மத். 2:2

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/HUM2ozRJLqI

பழைய ஏற்பாட்டில் தேவனால் கேட்கப்பட்ட முதல் கேள்வி, ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? (ஆதி. 3:9).  சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு பாவம் செய்த பின்பு, தாங்கள் நிர்வாணிகள், பாவிகள் என்ற உணர்வு வந்த வேளையில், தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேட்டுப் பயந்து ஒளித்துக் கொண்டிருந்த போது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு நீ எங்கே இருக்கிறாய் என்றார். புதிய ஏற்பாட்டில் அதே தேவன் பாவத்திலிருந்து மனிதனை மீட்டெடுக்கும் படிக்கு மனுக்கோலம் எடுத்து ஸ்திரீயின் வித்தாக அவதரித்த வேளையில், கிழக்கிலிருந்து ஞானிகள் அவரைத் தேடி எருசலேமிற்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? என்ற முதல் கேள்வியைக் கேட்டு, கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றனர்.

இயேசு இஸ்ரவேலை ஆளுகிறவராக பிறந்தார். எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது (மீகா-5:2). பெத்லகேம் என்ற அப்பத்தின் வீடு என்று அர்த்தம் கொள்ளும் சிறிய கிராமத்திலிருந்து ஜீவ அப்பமாகிய இயேசு இஸ்ரவேலை ஆளுகிறவராக தோன்றினார்.  அவர் ராஜாவாகவே வாழ்ந்தார், ஆகையால் அனேக தருணங்களில் யூதர்கள் அவரை ராஜவாக்கும்படிக்கு முயன்றார்கள். அவரை பிரதான ஆசாரியர்கள் விசாரித்த வேளையிலும் கூட, நீர் யூதருடைய ராஜாவா என்று கேட்ட வேளையில் ஆம் என்று கூறினார். சிலுவையில் மரித்த வேளையிலும், பிலாத்து சிலுவையில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்ற மேல்விலாசத்தை எழுதிவைத்தான். 

இயேசு, ஆவிக்குரிய யூதர்களாகிய நம்முடைய ராஜா. அவரை இரட்சகராய் ஏற்றுக்கொண்ட அத்தனை பேருக்கும் அவர் ராஜா. ராஜா என்றால் அவருக்கு ஒரு ராஜ்யம் உண்டு. ராஜ்யத்தில் குடிகள் காணப்படுவார்கள். அந்த ராஜ்யத்தின் மேல், குடிகள் மேல் முழு அதிகாரமும் ராஜாவுக்குக் காணப்படும்.  பூமியில் கர்த்தருடைய ராஜ்யம் அவருடைய மணவாட்டி சபையாய் காணப்படுகிறது. சபையின் தலையாய் காணப்படுகிற இயேசுவின் பூரண ஆளுகையின் கீழ் சபை மக்கள் காணப்படவேண்டும். மனித கொள்கைகளின், அதிகாரங்களின் கீழல்ல, இயேசுவின் அதிகாரத்தின் கீழ்க் காணப்படவேண்டும். லவோதிக்கேயா சபை இயேசுவை வெளியே விட்டு கதவைப் பூட்டிவிட்டது. ஆகையால் ஆண்டவர் கதவைத் தட்டிக்கொண்டு நிற்க  வேண்டியதாயிற்று. இயேசு சந்தோஷத்தோடு உலாவுகிற இடமாய் நம்முடைய சபைகள் காணட்டும். அதுபோல கர்த்தருடைய பிள்ளைகளாகிய  நாமும் இயேசுவை ஆண்டவரே என்று கூறுகிறோம். அதன் அர்த்தம், என்னை ஆளுகிறவரே என்பதாகக் காணப்படுகிறது. ஆனால், உண்மையாக இயேசு நம்முடைய வாழ்க்கையின் அத்தனைப் பகுதிகளையும் ஆளுகிறவராகக் காணப்படுகிறாரா? நம்முடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை முழுவதுமாய் கர்த்தருடைய ஆளுகைக்கு விட்டுக்கொடுத்திருக்கிறோமா என்பது சந்தேகமே. இன்னும் கர்த்தருடைய ஆளுகைக்கு விட்டுகொடாத பகுதிகள் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுமே என்றால் இந்தப் பண்டிகை காலங்களில் ஆண்டவருக்கு முழுவதுமாய் நம்மை அர்ப்பணிப்போம். பரம குயவனுடைய கரம் நம்மை முழுமையாக வனைவதற்கு நம்மை விட்டுக்கொடுப்போம். அப்போது இயேசு நம்முடைய வாழ்க்கையின் ராஜாவாக, நம்மை ஆளுகிறவராகக் காணப்படுவார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Mobile +974 5526 4318
Word of God Church
Doha – Qatar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *