நீதி 2:1-4 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,..
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hvlahGgWNhU
சாலொமோன் அநேக இடங்களில் மகனே என்று எழுதியிருப்பதை பார்க்கும்போது, யார் பிள்ளையை போல கீழ்ப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்கு இந்த ஞானத்திற்கு அடுத்த வசனங்களை குறிப்பிட்டு சொல்லுகிறார். ஞானத்தின் கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ள விருப்பமுள்ளவர்களாக நாம் காணப்பட வேண்டும். நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் இதுதான். நீங்கள் என் வார்த்தையைப் பெற்று என் கட்டளைகளைப் பொக்கிஷமாகக் காக்க வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், நீங்கள் தேவனின் வார்த்தைக்கு வரும்போது, வாக்குறுதிகளுக்காக மட்டுமல்ல, கட்டளைகளைத் தேட வேண்டும். இன்று அநேகருக்கு வாக்குத்தத்தம் வேண்டும்; ஆனால் கட்டளை வேண்டாம் என்ற மனநிலையில் காணப்படுகிறார்கள். நீங்கள் கட்டளைகளை எடுத்து அவற்றைப் பொக்கிஷமாகக் கருத வேண்டும், அவற்றை ஒரு சுமையாகக் கருதாமல், அவற்றை ஒரு பொக்கிஷமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் முதல் படி. தேவனின் வார்த்தையில் கட்டளைகளைத் தேட கற்றுக்கொள்ளுங்கள்.
உங்கள் காதுகளை ஞானத்திற்கு இசைவாகவோ அல்லது கவனமாகவோ வைத்திருங்கள். வானொலியில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் நாம் பாடல்களை கேட்பதுபோல, நம்முடைய காதுகள் எப்பொழுதும் ஞானத்திற்கு செவிகொடுக்கும்படி இருக்க வேண்டும்.
இங்கே மூன்று இருந்தால் என்ற கட்டளைகள் காணப்படுகிறது. ஆங்கிலத்தில் மூன்று IF காணப்படுகிறது. இந்த மூன்று காரியங்களையும் நாம் கவனிக்க வேண்டும். அவை ஞானத்திற்கான மூன்று படிகள். இந்த மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்களுக்கு ஞானம் கிடைக்கும். மக்களுக்கு ஞானம் இல்லையென்றால், அவர்கள் இந்த மூன்று நிபந்தனைகளையும் நிறைவேற்றாததால் தான் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
முதலாவது தேவனுடைய கட்டளைகளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தேவனின் வார்த்தையைப் பெற்று அவருடைய கட்டளைகளைப் பொக்கிஷமாகக் கருதுங்கள்.
அடுத்ததாக, உங்கள் முழு இருதயத்தோடும் ஞானத்தை கூப்பிடுங்கள். ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், சம்பூரணமாக ஞானத்தை கொடுக்கிற தேவனிடத்தில் கேட்கக்கடவன் என்று வேதம் கூறுகிறது. கடைசியாக, பூமியில் நீங்கள் மதிப்புமிக்கதாகக் கருதும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஞானத்தை முக்கிய விஷயமாகத் தேடுங்கள். பூமியில் உள்ள எதையும் விட ஞானத்தை நீங்கள் அதிகமாக மதிக்க வேண்டும்; உங்கள் வேலையை விட, உங்கள் மனைவியை விட, உங்கள் குழந்தைகளை விட, உங்கள் வீட்டை விட, உங்கள் சொத்தை விட, பூமியில் உள்ள எதையும் விட அதிகமாக ஞானத்தை பொக்கிஷமாக கருதுங்கள். நீங்கள் அதை வெள்ளியைப் போலத் தேடி, மறைக்கப்பட்ட பொக்கிஷங்களைப் போலத் தேடினால், ஞானத்தை பெற்றுகொள்ளுவீர்கள்.
இந்த உலகில் எவ்வளவு பட்டப்படிப்பு இருந்தாலும், விஞ்ஞானி என்று அழைக்கப்பட்டாலும், கர்த்தருக்கு பயப்படாமல், அவர் கட்டளைக்கு கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் முட்டாள் என்றே வேதம் அழைக்கிறது. உங்கள் பொக்கிஷம் எது என்று கேட்டால்; ஞானம் என்று சொல்லும் அளவிற்கு ஞானத்தை கருத்தாய் தேடுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

