ஆணிகள் பாய்ந்த கைகளும் கால்களும் (Hands and feet pierced with nails)

சங் 22:16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/xe0qTWxblGs

சங்கீதக்காரனாகிய தாவீது, இயேசு எப்படி சிலுவையில் அறையப்படப்போகிறார் என்பதை அநேக வருடங்களுக்கு முன்பாகக் கூறின வசனம்தான் மேற்குறிப்பிட்ட வசனம். தாவீது சில விலங்குகளின் பெயரை ஒப்புமைப்படுத்தி, எவ்வளவாய் துன்மார்க்கர்கள் இயேசுவை நெருக்கினார்கள், துன்புறுத்தினார்கள் என்று கூறுகிறான். காளைகளையும் எருதுகளையும் ஒப்புமைப்படுத்தி, சங்கீதம் 22:12-ல் “அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது” என்று கூறுகிறான். இயேசுவை பொல்லாத மனிதர்கள் காளைகளைப் போல சூழ்ந்துகொண்டார்கள். பலத்த எருதுகளைப் போல வளைந்துகொண்டார்கள். இயேசுவுக்கு விரோதமாக பொய் குற்றச்சாட்டைச் சாட்டினவர்கள், “பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்” (வசனம் 13) என்று எழுதப்பட்டிருக்கிறது. நாய்களைப் போல மனிதர்கள் சூழ்ந்தார்கள் (வசனம் 16,20). இப்படி இயேசுவை காளைகளைப் போல, எருதைப் போல, நாய்களைப் போல, சிங்கத்தைப் போல ஜனங்கள் வளைந்துகொண்டு துன்புறுத்தினார்கள். இப்படிப்பட்ட பொல்லாத ஜனங்கள் சூழ்ந்தபோது, இயேசுவுக்குத் துணையாகக்கூட இருந்த சீடர்களும் இல்லை என்பதை நினைக்கும்போது, எவ்வளவாய் இயேசு சரீரத்திலும், மனதிலும் காயப்பட்டிருப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசுவின் கைகளிலும் கால்களிலும் ஆணியடித்து சிலுவையில் அறைந்தார்கள். மத்தேயு 27:35 கூறுகிறது, “அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள்” என்பதாக. லூக்கா 23:33-ல் “கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்” என்பதாக எழுதப்பட்டிருக்கிறது. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள் என்று யோவான் 19:23 கூறுகிறது.

இப்படி கைகளிலும் கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்டவராக இயேசு சிலுவையில் தொங்கினார். இயேசுவின் கரம் பட்ட அநேகர் விடுதலையடைந்தார்கள். குஷ்டரோகியைத் தொட்டு சுகப்படுத்தினார். யவீருவின் மகளை கைபிடித்து உயிரோடு எழுப்பினார். அப்படி அற்புதம் செய்த கைகளில் ஆணிகள் அடித்தார்கள். காணாமற்போன ஆடுகளைத் தேடி இயேசு பல மணி நேரங்கள் நடந்தே சென்று சந்தித்தார். அவருடைய கால்கள் சுவிசேஷம் அறிவிக்க, பாவத்திலிருந்த ஜனங்களை இரட்சிக்க ஆயிரக்கணக்கான மைல் நடந்தது. அப்படிப்பட்ட கால்களிலும் ஆணிகள் அடித்தார்கள்.

இவையெல்லாவற்றையும் இயேசு உங்கள் ஒவ்வொருவருக்காகவும் ஏற்றுக்கொண்டார். மரணத்தை ருசிபார்த்தார். இவ்வளவு தியாகத்தோடு சிலுவையில் உங்களுக்காக உயிரைக் கொடுத்த இயேசுவுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்? இயேசுவின் ஆணிபாய்ந்த கைகளையும் கால்களையும் நோக்கிப் பாருங்கள். உங்கள் உள்ளம் உடைகிறது என்றால், அவருடைய அன்பை உணருவீர்களென்றால், மீதமுள்ள ஆயுசு நாட்களில் இயேசுவுக்காகச் செயல்படுங்கள். அவருடைய அன்பை உங்கள் நண்பருக்கும் உறவினர்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *