தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்குமுன்பாக ஓடிப்போவார்கள் (சங்கீதம் 68:1).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/_jHZtOVCvDU
இஸ்ரவேல் சபை வனாந்தரத்தில் காணப்பட்ட நாட்களில், கர்த்தருடைய பெட்டி அவர்களுக்கு முன்பாக புறப்படும் போது, மோசே கர்த்தரை நோக்கி: கர்த்தாவே எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக, உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்ற விண்ணப்பத்தை ஏறெடுப்பான். அதன்படியே, கர்த்தர் அவர்களுக்கு முன்பாகத் தடைகளை நீக்குகிறவராகக் கடந்து சென்றார். ஒருவனும் அவர்களுக்கு முன்பாக எதிர்த்து நிற்க முடியவில்லை. இஸ்ரவேல் ஜனங்களைக் குறித்த பயத்தைக் கர்த்தர் புறஜாதிகளுக்குள் கட்டளையிட்டார். மோசேயின் ஜெபத்தை, தாவீதும் கர்த்தரை நோக்கி ஏறெடுக்கிறதை மேற்குறிப்பிட்ட வசனத்தின் மூலம் பார்க்கமுடிகிறது. தாவீதிற்கும் அனேக எதிரிகள் காணப்பட்டார்கள். அவனை ஒரு தெள்ளுப்பூச்சியைப் போல வேட்டையாடின வேளைகளும் உண்டு. ஒருவேளை அவனும் யுத்தங்களுக்குச் செல்லும் போது, இந்த ஜெபத்தைக் கர்த்தரை நோக்கி ஏறெடுத்திருக்கக் கூடும்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்கு விரோதமாகவும் அனேகர் எழும்பலாம். மனுப்புத்திரரில் இழிவான குணம் உடையவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள் என்று வேதம் கூறுகிறது. இந்நாட்களில் ஆட்சி அதிகாரங்களில் இழிவான குணமுடைய சண்டாளர்கள் தேசங்களில் உயர்ந்திருப்பதினால் குற்றங்களும், லஞ்சங்களும், அநீதிகளும் எங்கும் பெருகிக் காணப்படுகிறது. புறஜாதிகள் நடுவில் நீங்கள் வேலைப் பார்க்கக்கூடும். அவர்கள் உங்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறவர்களாகக் காணப்படலாம், உங்கள் உயர்வுகளுக்குத் தடையாகக் காணப்படலாம். ஊழியங்களில் விரோதிகள் உங்களுக்கு எதிராக எழும்பலாம். சத்துரு உங்களுக்கு விரோதமாகச் செயல்படலாம். இப்படிப்பட்டவர்கள் உங்களுக்கு விரோதமாக எழும்பும் போது, கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்யும் படிக்கு எழுந்தருளுவார். அப்போது புகை பறக்கடிக்கப்படுவதுபோல உங்கள் எதிரிகளை அவர் பறக்கடிப்பார், மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள். உங்கள் எதிரிகளை நீங்கள் தேடியும் காணாதிருக்கும் படிக்குக் கர்த்தர் செய்வார். அவர்கள் உங்களுக்கு முன்பாக ஓடிப்போவார்கள். என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள், கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார், அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார் என்று சங்கீதக்காரனைப் போலக் கர்த்தர் உங்களையும் விசாலமான இடத்திலே கொண்டுவந்து துதிக்குப்படிக்குச் செய்வார். நீதிக்குரிய ஜீவியம் செய்யும் நீங்கள் தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவீர்கள்.
ஆகையால், மோசேயைப் போல, தாவீதைப் போல நீங்களும் இந்த ஜெபத்தை ஏறெடுக்க மறந்து விடாதிருங்கள். ஒவ்வொரு முறையும் வீடுகளை விட்டுப் புறப்படும் போது இவ்வண்ணமாக ஜெபியுங்கள். அப்போது கர்த்தர் உங்கள் எதிரிகளைச் சிதறடித்து, உங்களை வெற்றி சிறக்கப் பண்ணுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

