லேவி 26:8. உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/mTktYxkbiI4
பெந்தேகோஸ்தே நாளில் 120 பேர் மேல்வீட்டில் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நிரப்பிய பிறகு, உலகத்தைக் கலக்குகிற அசுர பலத்தை ஆதி திருச்சபை பெற்றுக்கொண்டது. அப் 4:32, 33 வசனங்களைப் பார்க்கும்போது, விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள் என்றும், ஆகையால், கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சி கொடுத்தார்கள் என்றும் வசனம் கூறுகிறது. பேதுரு மற்றும் யோவானின் குணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் இருவரும் ஒன்றிணைந்து தேவாலயத்திற்குச் சென்றபோது, தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனை நடக்கச் செய்தார்கள் (அப் 3:2). பவுலும் பர்னபாவும் இணைந்து ஊழியம் செய்தார்கள். பின்னாட்களில் பவுலும் சீலாவும் இணைந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவும் வேறே எழுபது பேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார் என்று லூக் 10:1 கூறுகிறது. மாத்திரமல்ல, இயேசு சொன்னார், “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்றார் (யோவா 13:35).
ஆரியபட்டா காலத்தில் இருந்த கணக்காக இருந்தாலும், ஸ்ரீனிவாச ராமானுஜன் கண்டுபிடித்த கணக்காக இருந்தாலும், ஒன்றையும் ஒன்றையும் கூட்டினால் இரண்டு என்றே இருக்கும். ஆனால் வேதம் காட்டும் கணக்கு முற்றிலும் வித்தியாசமானது. உதாரணத்திற்கு, ஒரு குதிரை சுமார் இரண்டு டன் எடையை இழுக்கும் என்றும், இரண்டு குதிரைகள் 23 டன் எடையை இழுக்கும் என்றும் சொல்லுகிறார்கள். அதுபோலத்தான் விசுவாசிகள் இணைந்து செயல்பட்டால் சாத்தானின் சர்வ சேனையையும் நிர்மூலமாக்கும் அசுர பலத்தைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள் என்று வேதம் கூறுகிறது. ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்த, இரண்டுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள் என்று உபா 32:30 கூறுகிறது. அதேபோல மேற்குறிப்பிட்ட வசனத்தின்படி, ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள், நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள் என்று வேதம் நமக்குக் கூறுகிறது. ஆகையால், தனியாக இருந்து சாத்தானின் இராஜ்ஜியத்தை கட்டுவதற்கும், சபையாக இணைந்து தேவனுடைய இராஜ்ஜியத்தை கட்டுவதற்கும் அதிகமாகவே வித்தியாசங்கள் உண்டு. ஆகையால், விசுவாசிகள் இணைந்து ஜெபிக்க தங்களை அர்ப்பணிக்கிறவர்களாகக் காணப்பட வேண்டும். இந்நாட்களில் சாத்தானும் சாத்தான் எழுப்புகிற ஜனங்களும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால், இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட ஜனம் ஒன்றிணைந்து ஜெபிக்கத் தவறுகிறது மிகவும் வருத்தத்திற்குரிய காரியமாகவே காணப்படுகிறது. நாம் மட்டும் ஒன்றிணைந்துவிட்டால், நாம் வாழ்கிற பட்டணங்கள், தேசத்தில் சாத்தானின் இராஜ்ஜியத்தை நாம் கவிழ்க்கலாம். நாம் ஒன்றுபட்டால், ஜெயம் நமக்குரியது, தோல்வி சாத்தானுக்குரியது என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.
ஆகையால், சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள் (எபே 4:3).
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

