தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார், அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. (ஆதி. 6:6)
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/bnRKQrK4qJQ
இரண்டு முறை வேதத்தில் தேவன் மனஸ்தாபப்பட்டார் என்று எழுதப்பட்டிருக்கிறது. முதலாவது, மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காக மனஸ்தாபப்பட்டார், அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது என்று ஆதி. 6:5,6வது வசனங்கள் கூறுகிறது. தேவகுமாரர்கள் மனுஷகுமாரத்திகளை அதிகச் சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். தேவகுமாரர்கள் என்று இங்கு எழுதப்பட்டிருப்பது தேவதூதர்களைக் குறித்து அல்ல, அவர்கள் தங்களுக்கு திருமணம் செய்து கொள்வதும், திருமணம் செய்து கொடுப்பதும் இல்லை என்று இயேசு மத். 22:30ல் கூறினார். ஆகையால் சேத்தின் வம்சத்தில் தோன்றின கர்த்தரை அறிந்தவர்களும், காயீனின் வம்சத்தில் தோன்றின கர்த்தரை அறியாதவர்களுக்கும் இடையே தோன்றின கலப்புத் திருமணத்தைக் குறிக்கிறதாய் காணப்படுகிறது. அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்று கர்த்தர் கேட்கிறார். கர்த்தருடைய பிள்ளைகள் கர்த்தர் தங்குகிற ஆலயமாயிருக்கிறீர்கள். கர்த்தர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணி, உங்களுக்குள்ளே உலாவி, உங்கள் தேவனாயிருப்பார் என்றும் நீங்கள் அவருடைய ஜனங்களாயிருப்பீர்கள் என்றும் வசனம் கூறுகிறது. ஆகையால் அப்படிப்பட்டவர்கள் நடுவிலிருந்து பிரிந்துபோய், அசுத்தமான அவர்களைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் அவ்வண்ணம் காணப்படும் போது, கர்த்தர் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பார், நீங்கள் அவருக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார் என்று 2 கொரி.6:14-18ல் எழுதப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட விவாகத்தின் விளைவு, வெள்ளத்தினால் கர்த்தர் தேசங்களை அழித்தார்.
இரண்டாவது முறை சவுலை ராஜாவாக்கினதின் நிமித்தம் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். இஸ்ரவேல் கோத்திரத்தில் மிகவும் சிறிய கோத்திரமாகிய பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவனை, கழுதையைத் தேடித்திரியும் தகுதியை மாத்திரம் பெற்றவனைக் கர்த்தர் தெரிந்தெடுத்து இஸ்ரவேல் தேசம் முழுவதையும் ஆளும் ராஜாவாக மாற்றி அவனை ஆசீர்வதித்துக் கனப்படுத்தி உயர்த்தினார். பின்னாட்களில் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், அமலேக்கியரை அழிக்காமல் பொருளாசையைச் சார்ந்து, இரண்டகமும் முரட்டாட்டமும் பண்ணி, மேட்டியிமையினித்தம் தனக்கென்று ஒரு ஜெய ஸ்தம்பத்தை ஏற்றுகிறவனாய் காணப்பட்டான். அதின் விளைவு கர்த்தர் அவனைத் தள்ளி, அவனிலும் உத்தமனாகிய தாவீதிற்கு ராஜாங்கத்தைக் கர்த்தர் கொடுத்தார். கொஞ்சம் கொஞ்சமாய் அவனுடைய குடும்பம் பலவீனப்பட்டுப் போனது.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தருக்கு விரோதமான காரியங்களைச் செய்து, அவருடைய மனஸ்தாபத்தைச் சம்பாதிக்கிறவர்களாய் ஒருநாளும் காணப்படாதிருங்கள். திருமணம் என்பது கர்த்தருடைய பார்வையில் மிகவும் கனத்திற்குரியது. சபையையும் விவாகத்தையும் கர்த்தர் ஒன்றாகப் பார்க்கிறார். ஆகையால் அவ்விசுவாசிகளோடு திருமணப் பந்தத்தில் இணைந்து இருளின் பிள்ளைகளாய் மாறிவிடாதிருங்கள். அது போலத் தாழ்வில் உங்களை நினைத்து உயர்த்தின தேவனை மறந்து, கீழ்ப்படியாமையும் மேட்டிமையும் கொண்டு கர்த்தருக்கு விரோதமான பாவங்களைச் செய்யாதிருங்கள். இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் செய்தால் கர்த்தருடைய மனஸ்தாபத்தைச் சம்பாதிப்பீர்கள். ஆகையால் இவைகளுக்கு விலகி ஜீவிக்க உங்களை அர்ப்பணியுங்கள், அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

